top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

எட்டு லட்சம் தீக்குச்சிகளால் வடிவமைத்த 7மீற்றர் உயர ஈபிள் கோபுரம்! உலக சாதனையாக அறிவிப்பு!!

முதலில் ஏற்க மறுத்த

கின்னஸ் தீர்ப்புக் குழு

இறுதியில் அங்கீகாரம்


முழுவதும் தீக்குச்சிகளால் வடிவமைக்கப்பட்ட உலகின் உயர்ந்த ஈபிள் கோபுரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


பிரான்ஸின் Montpellier-de-Médillan (Charente-Maritime) என்ற இடத்தில் ரிச்சாட் ப்லோட் (Richard Plaud) என்பவரே இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


706,900 தீக்குச்சிகளையும் 2.3 கிலோ ஒட்டும் பசையையும் பயன்படுத்திச் சுமார் 4ஆயிரத்து 200 மணித்தியாலங்கள் செலவு செய்து கடும் உழைப்பினால் அவர் 7.19 மீற்றர்கள் உயரமான கோபுரத்தை அதன் அச்சு அசல் தோற்றத்தில் அப்படியே வடிவமைத்திருக்கிறார்.

கடந்த டிசம்பரில் கோபுர வடிவமைப்பை நிறைவு செய்த அவர், அதனை உலக சாதனையாக நிறுவுமாறு கேட்டு கின்னஸ் உலக சாதனைக் குழுவுக்கு அறிவித்திருந்தார். இங்கிலாந்தில் உள்ள கின்னஸ் குழுவின் தீர்ப்பாளர்கள் கோபுரத்தைப் பரிசோதித்த பின்னர் அது பயன்பாட்டில் உள்ள சாதாரண தீக்குச்சிகளால் வடிவமைக்கப்படவில்லை எனத் தெரிவித்து அதனை உலக சாதனைப் புத்தகத்தில் பதிவதற்கு மறுத்திருந்தனர்.

தீப்பற்றும் மருந்துத் தலைகள் (sulphur tops) இல்லாத குச்சிகளைக் கொண்டு கோபுரம் வடிவமைக்கப்பட்டிருந்தமையே அதற்குக் காரணமாகும்.


சாதனையாளர் ரிச்சாட் ப்லோட் தீக்குச்சிகளைத் தீப்பெட்டித் தயாரிப்பாளர்களிடம் இருந்து மொத்தமாகக் கொள்வனவு செய்திருந்தார். கோபுரத்தை வடிவமைப்பதற்காக வெடிமருந்துத் தலைகள் இல்லாத குச்சிகளை நேரடியாக வாங்கியதை அவர் கின்னஸ் குழுவினருக்குத் தெளிவுபடுத்தியிருந்தார். அதன் பிறகே அவரது சாதனையைக் கின்னஸ் குழு ஏற்றுக் கொண்டது. உலகில் தீக் குச்சிகளால் வடிவமைக்கப்பட்ட மிக உயர்ந்த ஈபிள் கோபுரம் அது என்பது

கின்னஸ் புத்தகத்தில் இப்போது பதிவுசெய்யப்பட்டுளளது.


சாதனை படைத்துள்ள இந்தத் தீக்குச்சி ஈபிள் கோபுரம் பாரிஸில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது விளையாட்டு ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனத் தெரிய வருகிறது.


தீக்குச்சிகளால் ஈபிள் கோபுரத்தை வடிவமைக்கும் சாதனை இதற்கு முன்னர் லெபனானில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள ஒருவரால் வடிவமைக்கப்பட்ட 6.53 மீற்றர்கள் உயரமான கோபுரமே

இதுவரை உலக சாதனையாகப் பதிவாகி இருந்தது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

10-02-2024


0 comments

Commentaires


You can support my work

bottom of page