top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

எதிர்வுகூறியதை விட அதிக பனிப் பொழிவு, பாரிஸில் விமான சேவை ஸ்தம்பிதம்

🔵நாளை மதியம் வரை

ஈபிள் ரவர் மூடப்பட்டது

🔵வீதிகளில் வாகன நெரிசல்

இரண்டு லட்சத்துக்கும் அதிக

குடியிருப்புகளுக்கு மின்தடை


பாரிஸ், நவம்பர் 21


"கேற்றனா" தாழமுக்கம் (Caetano depression) ஏற்படுத்திய பனிப் பொழிவு காரணமாகப் பாரிஸ் நகரம் உட்பட நாட்டின் பெரும் பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

54 மாவட்டங்கள் பனிப் பொழிவு மற்றும் கடுங்காற்று, உறைபனி தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் உள்ளன.


இன்று வியாழக்கிழமை வானிலை அவதான நிலையமாகிய மெத்தியோ பிரான்ஸ் எதிர்வுகூறியிருந்த அளவைவிட அதிகமான பனிப் பொழிவு பல இடங்களிலும் பதிவாகியிருக்கிறது. பாரிஸின் வடக்கே அமைந்துள்ள CDG சர்வதேச விமான நிலையத்தின் (Paris-Charles-de-Gaulle) சகல முனையங்களினதும் ஓடு பாதைகளைப் பனி மூடியதால் சேவைகள் இன்று மாலை வரை தடை தாமதங்களைச் சந்தித்துள்ளன.

பனியை வாரி அகற்றி ஓடுபாதைகளைத் துப்புரவு செய்யும் பணியில் இருநூறுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

படம் :ஓடுபாதைகளில் பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இயந்திர வாகனங்கள்.


மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளில் தடை தாமதங்கள் இருக்கும் என்று பாரிஸ் சிவில் விமானப் போக்குவரத்துப் பொது இயக்குநரகம் (Directorate General of Civil Aviation) அறிவித்துள்ளது. இறுதி நிமிட சேவை ரத்துக்களை நிராகரிக்க முடியாது என்று எயார் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


பாரிஸ் ஈபிள் கோபுரம் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை பார்வையாளர்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் வேறு சில முக்கிய உல்லாசப் பயண மையங்களும் பனிப் பொழிவு காரணமாக மூடப்பட்டிருக்கின்றன.

பனி மூடிப் பரந்த பாரிஸ் நகரத்தைக் கோபுரத்தின் மேலே இருந்து பார்த்து ரசிப்பதற்குப் பெரும் எண்ணிக்கையானோர் முண்டியடித்தபோதிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கோபுரம் மூடப்பட்டிருக்கிறது.


சில பிராந்தியங்களில் பாடசாலைகள் மூடப்பட்டன. பாடசாலை பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. அதேசமயம்

மின்சாரக் கேபிள்களில் பனி படர்ந்ததை அடுத்து நாடு முழுவதும் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் தனியார் வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. பிரதான வீதிகளில் வாகன நெரிசல்கள் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

21-11-2024

0 comments

Comments


You can support my work

bottom of page