top of page
Post: Blog2_Post

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டாவிட்டால் மக்ரோனிடம் உள்ள தெரிவுகள் என்ன?

கருத்துக்கணிப்புகளில்

தீவிர தேசியவாதிகளே

தொடர்ந்தும் முன்னணி

விரிவான செய்திக்கு ThasNews.Com


பாரிஸ், ஜூலை 6


ஐரோப்பியக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்டத்தின் இறுதியாட்டத் தெரிவுப்போட்டிகள், பொதுத் தேர்தலின் இறுதிச் சுற்று என்று அரசியலும் விளையாட்டும் கலந்து சூடு பிடிக்கின்ற பரபரப்பான நாட்கள் கடந்துகொண்டிருக்கின்றன.


நாளைய இரண்டாவது சுற்றிலும் தீவிர வலதுசாரிகளுக்கே பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும், ஆனால் அறுதிப் பெரும்பான்மை கிட்டுவது ஐயமே என்பதை இறுதிநேரக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வாக்களிப்பில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ அல்லது கட்சிகளுக்குள் பொதுவான இணக்கப்பாட்டுடன் ஒரு கூட்டணி அரசு அமைக்கின்ற வாய்ப்புகள் எட்டப்படாவிட்டாலோ அடுத்து நடக்கப்போவது என்ன?


நாட்டைக் கொண்டு நடத்துகின்ற அரசாங்கம் ஒன்றை அழைக்க வேண்டிய அதிகாரம் மிக்கவரான அரசுத் தலைவர் மக்ரோனுக்கு முன்பாக உள்ள தெரிவுகள் என்னவாக இருக்கும்?


-இந்தப் பிரதான கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.


நாடாளுமன்றத்தைப் பொருத்தமற்ற ஒரு தருணத்தில் திடீரெனக் கலைத்து நாட்டில் அரசியல் ஸ்திரமின்மையையும் குழப்பங்களையும் ஏற்படுத்திவிட்டார் என்ற பரவலான குற்றச் சாட்டுக்கு இலக்காகியுள்ள மக்ரோன் பதவி விலகிப் புதிய தேர்தல்களுக்கு வழி விடுவது ஒரு தெரிவு. ஆனால் அது அவர் முன் உள்ள இறுதித் தெரிவாகவே இருக்கலாம். அரசமைப்பின் படி அதிபர் 2027 ஜூன் வரை அதிகாரத்தில் நீடிக்க எந்தத் தடைகளும் இல்லை.


🔵புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு அதிபருக்கு எவ்வித கால அவகாசமும் கிடையாது. தற்போதைய பிரதமர் கப்ரியேல் அட்டால் பதவி விலகும் கடிதத்தைச் சமர்ப்பித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவரது தலைமையிலான அரசாங்கத்தை அடுத்த சில வாரங்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ "நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காக" (Dealing with “current affairs”) பதவியில்

நீடிக்க மக்ரோன் அனுமதிக்கலாம். பாரிஸில் நடைபெறவிருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகளது முக்கியத்துவம் கருதியும் , இரு மாத காலக் கோடை விடுமுறையைக் காரணங்காட்டியும் புதிய பிரதமர் நியமனத்தை அதிபர் தள்ளிவைக்க கூடும். அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.


🔵 அடுத்த தெரிவு கூட்டணி ஆட்சி ஒன்றை நிறுவ அதிபர் எடுக்கக் கூடிய முயற்சி. அறுதிப் பெரும்பான்மை பெறக்கூடிய பல கட்சிக் கூட்டணி (rainbow coalition) ஒன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பொறுப்பான ஒருவரை அரசுத் தலைவர் நியமிக்க முடியும். உதாரணமாகத் தீவிர வலதுசாரிகள் ஆட்சி அமைக்க வலுவற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் இடதுசாரிகளில் ஒரு பகுதியினரும் மக்ரோனின் ஆளும் கட்சி அணியும் வலதுசாரிகளில் ஒரு பிரிவினரும் இணைந்த கூட்டணி.


🔵இன்னொரு தெரிவு பொறிமுறை அரசு ஒன்றைக் கட்டமைத்தல் - (composition of a technical government)

அரசியல் கட்சிகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைத் தவிர்த்துவிட்டுப் பல்வேறு துறைகளிலும் இருக்கின்ற நிபுணத்துவம் மிக்கவர்களைத் தெரிவு செய்து முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வழங்கி அமைச்சரவை ஒன்றை நியமிக்கலாம். இந்த முறைமைக்கு நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் இணங்க

வேண்டும். பொறிமுறை அரசுக்கான உறுப்பினர்கள் சிவில் சமூகம், சிவில் நிர்வாகத் துறைகளில் இருந்து தெரிவு செய்யப்படுவர். உதாரணமாகப் பிரான்ஸ் தேசிய வங்கியின் ஆளுநரிடம் நிதி அமைச்சுப் பொறுப்பு ஒப்படைக்கப்படலாம். சமீப காலங்களில் இத்தாலியில் இது போன்ற பொறிமுறை அரசாங்கம்

பதவியில் இருந்துவந்துள்ளது.


எது எவ்வாறாயினும் நாளைய வாக்களிப்பை அடுத்துத் தெரிவாகக் கூடிய நாடாளுமன்றத்தை அடுத்த ஆண்டு ஜூன் 9 ஆம் திகதிக்கு முன்பாகக் கலைக்க முடியாது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

06-07-2024








0 comments

Comments


You can support my work

bottom of page