top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

எம்பி பதவிக்குப் போட்டியிடுகிறார் முன்னாள் அதிபர் ஹொலன்ட்!

இடதுசாரி முன்னணியை

ஆதரித்துக் களம் குதிப்பு


நாடாளுமன்ற கலைப்பை

விமர்சித்து அவர் கருத்து

பாரிஸ், ஜூன் 16


நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் மிக மோசமான காலகட்டத்தில் வந்திருக்கிறது. ஐரோப்பாவின் வாசலில் போர் நடந்துகொண்டிருக்கின்ற சமயத்தில் இது உகந்த முடிவு அல்ல - என்று கூறி விமர்சித்திருக்கிறார் முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட்.


அதேசமயம் -


தேர்தல் களம் பரபரப்பாகிவருகின்ற

சமயத்தில் முன்னாள் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்ற தகவலை "லா மொன்தான்" (La Montagne) என்ற பிராந்தியப் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது. பிரான்ஷூவா ஹொலன்ட் பின்னர் செய்தியாளர்களிடம் அதனை ஒப்புக்கொண்டுள்ளார்.


"ஒரு விதிவிலக்கான சூழ்நிலையில், எடுத்த ஒரு விதிவிலக்கான முடிவு"இது என்று கூறியுள்ள அவர் நாடு மிக மோசமான கட்டத்தில் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.


பிரான்ஸின் தென்மேற்குக் கோரேஸ் (Corrèze) மாவட்டத்தில் அவர் தனது சொந்தத் தேர்தல் தொகுதியில் இருந்து போட்டியிடவுள்ளார். 1997-2012 ஆண்டு காலப்பகுதியில் அவர் இதே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்துள்ளார்.


மக்ரோன் அறிவித்த திடீர்த் தேர்தலை எதிர்கொள்வதற்காக நாட்டின் இடது

சாரிகளும் பசுமைக் கட்சிகளும் சேர்ந்து அமைத்துள்ள கூட்டு முன்னணியின் ஆதரவுடன் - சோசலிஸக் கட்சியின் சார்பில் - ஹொலன்ட் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சோசலிஸக் கட்சி இன்னமும் அதனை உறுதிப்படுத்தவில்லை.


தேர்தலில் இடதுசாரிகள் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கின்ற நிலைமை வந்தால் பிரதமர் தெரிவில் முன்னணிக்குள் குழப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறான குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகப் பிரான்ஷூவா ஹொலன்ட் பிரதமராக நியமிக்கப்படுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

16-06-2024


0 comments

コメント


You can support my work

bottom of page