top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

எரித்து கொல்லப்பட்ட உகண்டா ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனைக்கு பாரிஸ் நகரசபை அஞ்சலி, கௌரவம்!

விளையாட்டு அரங்குக்கு

அவர் பெயர் சூட்டப்படும்

பாரிஸ், செப்ரெம்பர் 6


பாரிஸில் உள்ள விளையாட்டு அரங்கம் ஒன்றுக்கு உகண்டா நாட்டின் ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை ரெபேக்கா செப்ரெகேயின் (Rebecca Cheptegei) பெயர் சூட்டப்படும் என்று நகரசபை முதல்வர் ஆன் கிடல்கோ அறிவித்திருக்கிறார்.


உகண்டா நாட்டைச் சேர்ந்த 33 வயதான

பிரபல ஓட்ட வீராங்கனை ரெபேக்கா பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பெண்களுக்கான மரதன் ஓட்டத்தில் பங்குபற்றியிருந்தார். போட்டி முடிந்து நாடு திரும்பிய சில வாரங்களில் கென்யா நாட்டில் வைத்து உயிருடன் தீ மூட்டி எரித்துக் கொல்லப்பட்டார். ஒரு குழந்தையின் தாயான அவரது முன்னாள் துணைவர் எனக் கூறப்படுகின்ற ஆண் ஒருவரே மறைந்திருந்து ரெபேக்காவின் உடல் மீது பெற்றோல் ஊற்றி நனைத்தபின்னர் தீ மூட்டியுள்ளார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர் கடந்த வியாழனன்று உயிரிழந்தார். பொலீஸ் மற்றும் மருத்துவ அறிக்கைகளின்படி அவரது உடலில் 80 வீதமான பகுதிகள் மிக மோசமாக எரிந்த காரணத்தால் உள் ளுறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.


தனது பிள்ளையின் கண் முன்னிலையிலேயே ரெபேக்கா தீயில் எரிந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அவரது மரணம் குறித்து சீற்றமும் ஆழ்ந்த துயரமும் அடைவதாகத் தெரிவித்துள்ளது.


"மிகவும் கொடியது" என்று ஐக்கிய நாடுகள் சபையால் குறிப்பிடப்பட்ட ரெபேக்காவின் மரணம் விளையாட்டு

உலகம் கடந்து சகல தரப்புகளினதும் பரவலான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது பலத்த உணர்வலைகளையும் அது ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு உலகிலும் அதற்கு வெளியேயும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களும் கொடுமைகளும் தடுத்துநிறுத்தப்பட வேண்டும் என்ற

குரல்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன.


"ரெபேக்காவின் அழகு, துணிவு, வலிமை, சுதந்திரம் அனைத்தையும் பாரிஸில் நாம் நேரில் கண்டோம். கொலையைப் புரிந்தவரால் அவற்றைச் சகிக்க முடியாமல்போயிருக்கிறது."


"பாரிஸ் அவளை மறக்காது. நாங்கள் விளையாட்டு அரங்கம் ஒன்றை அவளுக்காக அர்ப்பணிப்போம். அவளது வாழ்க்கைக் கதையும் நினைவுகளும் அதன் மூலம் நம் மத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும்.

ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளின் குறிக்கோளாகிய ஆண் பெண் சமத்துவம் என்ற செய்தியும் அதன் மூலம் கடத்தப்படும்.. "


-இவ்வாறு முதல்வர் ஹிடல்கோ பாரிஸில் செய்தியாளர்கள் மத்தியில்

தெரிவித்தார்.


மிகவும் வறிய குடும்பம் ஒன்றில் பிறந்த ரெபேக்கா தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவே முதலில் ஓடத் தொடங்கினார். வீதிகள், மலைகள் மற்றும் நாடுகள் கடந்த ஓட்டப் போட்டிகளில் வென்று பின்னர் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் ஓட்ட சாதனைகளை நிகழ்த்தினார். பாரிஸில் நடந்த பெண்களுக்கான ஒலிம்பிக் மரதன் ஓட்டப் போட்டியில் அவர் 44 ஆவது இடத்தை அடைந்தார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

06-09-2024










0 comments

Comments


You can support my work

bottom of page