top of page
Post: Blog2_Post

எலிசபெத் போர்ன் பதவி விலகினார்! புதிய பிரதமராக கப்ரியேல் அட்டால்?

புதிய அமைச்சரவை

விவரங்கள் நாளை


கடந்த சில நாட்களாக நீடித்துவந்த ஊகங்கள் முடிவுக்கு வருகின்றன. அதிபர் மக்ரோன் தனது அமைச்சரவையை மாற்றி அமைக்கிறார். அதற்கு வசதியாகத் தற்போதைய பிரதமர் எலிசபெத் போர்ன் தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரதமரின் பதவி விலகலை அரசுத் தலைவர் மக்ரோன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று எலிஸே மாளிகை இன்று மாலை அறிவித்தது.


மக்ரோன் புதிய பிரதமராக யாரை நியமிக்கவுள்ளார் என்பது தொடர்பில்

ஊகங்கள்நீடிக்கின்றன. எனினும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்களது தகவலின் படி நாட்டின் அடுத்த இளம் பிரதமராகத் தற்போதைய தேசிய கல்வி அமைச்சர் கப்ரியேல் அட்டால்(Gabriel Attal) நியமிக்கப்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

புதிய பிரதமர் யார் என்பதும் புதிய அமைச்சர்களது விவரங்களும் நாளை செவ்வாய்க்கிழமையே அறிவிக்கப்படும் என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் இன்றிரவு தகவல் வெளியிட்டன.

34 வயதான கப்ரியேல் அட்டால் பிரதமராக நியமிக்கப்பட்டால் நாட்டின் வரலாற்றில் வயதில் குறைந்த இளைய பிரதமர் என்ற பெருமை அவரைச் சாரும் என்று கூறப்படுகிறது.


புதிய பிரதமர் பதவிக்கு வேறு சில முக்கிய அரசியல் பிரமுகர்களது பெயர்களும் செய்திகளில் இடம்பிடித்துள்ளன. அவர்களில்

தற்போதைய ஆயுதப்படைகளின் அமைச்சர் (பாதுகாப்பு அமைச்சர்)

செபாஸ்டியன் லுகோர்னு (Sébastien Lecornu) முன்னிலையில் இருக்கிறார்.

முன்னாள் விவசாய அமைச்சர் ஜூலியன் டேனோர்மென்டி (Julien Denormandie) தற்போதைய நிதி அமைச்சர் புறுனோ லு மேயர் ஆகிய இருவரது பெயர்களும் கூட புதிய தெரிவில் இடம்பிடித்துள்ளன.

மக்ரோனின் ஆளும் கட்சி 2022 தேர்தலில் நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது முதல்

அரசியல் பொருளாதாரச் சீர்திருத்தச் சட்டங்களை நிறைவேற்ற முடியாத குழப்ப நிலையை எதிர்கொண்டு வருகிறது.


கடந்த சுமார் 20 மாதங்களுக்கு மேலாகப் பிரதமர் பதவியில் நீடித்துவந்த எலிசபெத் போர்ன், மக்ரோன் அரசின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய மறுசீரமைப்புச் சட்டம் மற்றும் புதிய குடியேற்றச் சட்டம் போன்ற முக்கிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் ஏற்பட்ட பெரும்

அரசியல் குழப்பங்களுக்கு முகம் கொடுத்திருந்தார். பெரும்பான்மை கிட்டாத நிலையில் மக்ரோனின் பொருளாதாரச் சீர்திருத்தச் சட்ட மூலங்கள் பலவற்றை நாடாளுமன்ற வாக்கெடுப்பினூடாக நிறைவேற்றுவதைத் தவிர்த்துவிட்டு

அரசமைப்பின் 49.3 என்ற விசேட விதியைப் பயன்படுத்தி

வாக்கெடுப்பின்றியே குறுக்கு வழிமுறையைப் பின்பற்றி நிறைவேற்றினார். 49.3 விதியை 23 தடவைகள் பயன்படுத்திய பிரதமர் என்று அவர் வர்ணிக்கப்படுகிறார்.


பதவி விலகிச் செல்கின்ற எலிசபெத் போர்ன் பிரான்ஸின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். பிரான்ஷூவா மித்ரோனின் ஆட்சியில் 1991-1992 காலப்பகுதியில் பிரதமர் பொறுப்பு வகித்த எடித் கிரேசொன் (Édith Cresson) என்பவரே முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

08-01-2024





0 comments

Kommentare


You can support my work

bottom of page