அநுர குமாரவின் வெற்றி
விருப்பு வாக்கில் முடிவாகும்
மிக அமைதியான வாக்களிப்பு
எனினும் நாடளாவிய ஊரடங்கு
படம் :Anura Kumara Dissanayake
பாரிஸ், செப்ரெம்பர் 22
சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாததால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணும் பணியைத் தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. நாட்டின் தேர்தல் வரலாற்றில் இவ்வாறு விருப்பு வாக்குகளை எண்ணி வெற்றியாளரைத் தீர்மானிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவர் தான் தெரிவு செய்கின்ற வேட்பாளருக்கு மேலதிகமாகத் தனது இரண்டாவது மூன்றாவது விருப்பத் தெரிவுகளையும் வாக்குச் சீட்டில் குறிப்பிட முடியும். அவ்வாறு செலுத்தப்பட்ட இரண்டாவது மூன்றாவது விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் யார் என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.
முதல் இரண்டு இடங்களுக்கு வந்துள்ள
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திஸநாயக்கா மற்றும் பிரதான எதிர்க்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகிய இருவரில் யார் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதை அறிந்து வெற்றியைத் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இவர்கள் இருவரையும் தவிர எஞ்சிய வேட்பாளர்கள் அனைவரும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்த தேர்தல் பெறுபேறுகளும் இன்னமும் உத்தியோக பூர்வமாக நாட்டுக்கு அறிவிக்கப்படாத நிலையிலேயே மறுவாக்கு எண்ணும் பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதுவரை முடிவுகளின் படி அநுர குமார 40 சதவீத வாக்குகளைத் திரட்டியிருப்பதைப் பூர்வாங்க மதிப்பீடுகள் காட்டுகின்றன.. அவருக்கு அடுத்த நிலையில் சஜித் பிரேமதாசா சுமார் 33 சதவீத வாக்குகளை வென்றிருக்கிறார். பதவியில் இருந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு போட்டியில் இருந்து நீங்குகிறார்.
அதிபரைத் தெரிவு செய்வதற்காக சுமார் 17 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். நேற்று மாலை நான்கு மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்த சமயத்தில் நாடெங்கும் 75 சதவீதமான வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்தத் தேர்தலில் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்திருப்பதை இது காட்டுவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
வன்செயல்கள் ஏதும் இன்றி மிக அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாகத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.
எனினும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக நாடு முழுவதும் நேற்றிரவு அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணிக்கு நீக்கப்பட்டது.
மிக அதிகமாக 38 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கிய இந்தத் தேர்தலில் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க, பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மற்றும் அநுர குமார திஸநாயக்கா ஆகிய மூவருக்கு இடையிலேயே கடும் போட்டி நிலவியது.
நாடு வரலாறு காணாத நிதி நெருக்கடியையும் அதன் விளைவாக வெடித்த பெரும் மக்கள் போராட்டங்களையும் கண்ட பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தேர்தல் நடந்துள்ளது. 2022 இல் கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச
அதிகாரத்தில் இருந்து துரத்தப்பட்டார்.
ராஜபக்சக்களின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. கோத்தாபய நாட்டை விட்டு ஓடநேர்ந்த பாரிய மக்கள் போராட்ட அலையின் பின்னால் அநுர குமார திஸநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி
கட்சியும் (National People's Power - NPP).செயற்பட்டது. அதனால்
மக்கள் போராட்டத்தின் அரசியல் பலாபலன்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன. அனுர குமார செல்வாக்கு மிக்க தலைவராக மாறினார்.
பாரம்பரிய கட்சிகளில் ஒன்றாகிய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க
நாட்டை மீட்டெடுக்கின்ற அவசர திட்டங்களோடு தேர்தல் இன்றியே அதிபராகத் தெரிவாகி இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடித்தார். அவரது வருகையோடு மக்களது வீதிப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. அவர் முன்னெடுத்த திட்டங்கள் நாட்டில் உணவு, எரிபொருள்
உட்பட அத்தியாவசிய சேவைகளை ஓரளவு வழமைக்குத் கொண்டுவந்தன. நிலைமை ஓரளவு சீரடைந்தபோதிலும்
நாடு இன்னமும் பெரும் வெளிநாட்டுக் கடனில் சிக்கிக் கிடக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு விதிகளின் கீழ் விக்கிரமசிங்க முன்னெடுத்த வரி விதிப்புகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மக்களில் பலரதும் வாழ்வை நெருக்கடிக்குள் தள்ளித் திணறவைத்திருந்தது.
இந்தப் பின்னணியிலேயே இன்றைய அதிபர் தேர்தல் நடைபெற்றிருக்கிறது.
விருப்பு வாக்கு எண்ணிக்கையும் அனுர வுக்கே வெற்றி வாய்ப்பை வழங்கும் என்று பரந்த அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
56 வயதான அநுர குமார திஸநாயக்கா
ஜேவிபி (Janatha Vimukthi Peramuna) என்கின்ற முன்னாள் மார்க்சிஸப் போராட்ட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை 2014 இல் ஏற்றிருந்தார்.
அதன் பின்னர் 2019 இல் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியை நிறுவி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
1980 களில் நாட்டின் தென் பகுதிகளில் தீவிரமான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்துவந்த ஜேவிபி இயக்கத்தின் கடந்தகால வன்முறைப் பாதையை மறக்கச் செய்து அந்தக் கட்சிக்கு மக்கள் மத்தியில் புதிய முகத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்திய தலைவராக அவர் மதிக்கப்படுகிறார். அதேசமயம் சமீப காலங்களில் தேசிய அரசியலில் அவரது செல்வாக்கு வளர்ந்து வந்தது.
சிறிலங்காவின் வட மத்திய மாகாணத்தில் அனுரதபுரம் மாவட்டத்தில் தம்பத்தகமவில்
(Thambuthegama) நவம்பர் 24,1968 இல் பிறந்தவர். தம்பத்தேகம காமினி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் தம்பத்தேகம மத்திய கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றவர். அதே கல்லூரியில் இருந்து
முதல் மாணவனாகப் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவானவர் என்று
தகவல்கள் உள்ளன.
பாடசாலை நாட்களில் இருந்தே ஜேவிபியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், 1987 இல் அந்த இயக்கத்தில் இணைந்திருந்தார்.
அநுர குமார திஸநாயக்கா அதிபராகப் பதவிக்கு வரும் பட்சத்தில் நாட்டின் பாரம்பரியம் மிக்க பிரதான கட்சிகள் இரண்டுக்கும் வெளியே மூன்றாவது தரப்புக் கட்சி ஒன்றில் இருந்து அதிகாரத்துக்கு வருகின்ற முதலாவது ஜனாதிபதியாக அவரே திகழ்வார்.
நாட்டின் அரசியல் போக்கில் அது ஒரு முக்கிய திருப்பமாக இருக்கப்போவது நிச்சயமாகும்.
மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
22-09-2024
Comments