வெளிவிவகார அமைச்சுக்கு
தூதரை அழைத்து ஆட்சேபம்
பாரிஸ், ஒக்ரோபர், 11
தெற்கு லெபனானில் நிலைகொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையினர் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு சர்வதேச ரீதியாகக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் விடுத்த ஒரு கூட்டறிக்கையில் இஸ்ரேலின் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆட்சேபம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ. நா. அமைதிப் படைத் தளங்களைத் தாக்க வேண்டாம் என்று இஸ்ரேலிடம் கேட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் அதிபர் மக்ரோன் இஸ்ரேலின் செயலைக் கடுந் தொனியில் கண்டித்திருக்கின்றார்.
"நாங்கள் அதனைக் கண்டிக்கின்றோம். அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மற்றொருமுறை நடப்பதைப் பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளமாட்டாது" - என்று அவர் சைப்பிரஸில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரான்ஸின் ஆட்சேபத்தையும் கண்டனத்தையும் நேரில் தெரிவிப்பதற்காகப் பாரிஸில் உள்ள இஸ்ரேலியத் தூதர் இன்று வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டார். அமைதிப் படையினர் மீதான தாக்குதல் பற்றி இஸ்ரேல் தானாகவே முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.
நீலத் தலைக்கவசம் (Blue Helmets) என்று அழைக்கப்படுகின்ற ஐ.நா அமைதிகாக்கும் படையினர் லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் எல்லையோரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் இடையே மோதல் நடைபெறுகின்ற இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள ஐ. நா. படையினரது மூன்று நிலைகள் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டிருக்கின்றன.
தாக்குதல்கள் அடுத்தடுத்து நடைபெற்றமை இஸ்ரேலியப் படைகள் தெரிந்துகொண்டே - வேண்டுமென்று - ஐ. நா. படைகளை இலக்கு வைத்திருப்பதாகவே கருதப்படுகிறது.
இஸ்ரேலிய டாங்கிகள் வியாழக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஐ. நா. அமைதிப் படை வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் மற்றொரு வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு வீரர்கள் காயமடைய நேரிட்டுள்ளது.
இதேவேளை, லெபனான் தலைநகராகிய பெய்ரூட்டின் மையப் பகுதி மீது முன்னெச்சரிக்கை எதுவுமின்றி இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்கு பெரும் அச்ச நிலைமை அதிகரித்துவருகின்றது.
⚫தொடர்புடைய செய்தி :https://www.thasnews.com/post/ந-ங-கள-ஒர-சனத-த-க-ய-ப-பல-க-ட-த-த-ப-பயங-கரவ-தத-த-க-க-எத-ர-ன-ப-ர-நடத-தவ-ல-ல
தாஸ்நியூஸ் - பாரிஸ்
11-10-2024
Comentarios