புனரமைப்பு நிறைவு
டிசெம்பர் 8 இல் திறப்பு
பாரிஸ், நவம்பர் 10
பாரிஸில் புகழ்பெற்ற நொத்த-டாம் மாதா கோவில் மணிகள் ஐந்து ஆண்டுகளின் பின்னர் கடந்த எட்டாம் திகதி வெள்ளிக்கிழமை ஒன்றாக ஒலித்தன. 2019 ஏப்ரலில் ஆலயம் திடீரெனத் தீக்கிரையான பிறகு தொடங்கப்பட்ட புனரமைப்புப் பணிகள் தற்சமயம் நிறைவுக்கு வந்துள்ளன.
அதனையடுத்து ஆலயத்தின் வடக்கு மணிக்கோபுரத்தில் பொருத்தப்பட்ட புதிய எட்டு மணிகள் வெள்ளிக்கிழமை முற்பகல் பத்து மணியளவில் பரீட்சார்த்தமாக ஒலிக்கவிடப்பட்டன.
மணிகள் ஒவ்வொன்றாக எழுப்பிய ஓசை சூழவுள்ள நகரப்பகுதிவாழ் மக்களை உற்சாகப்படுத்தியது.
ஆலயத்தின் மீள் எழுச்சியில் இது ஓர் அழகான - முக்கியமான - அடையாளம் என்று ஆலயப் புனரமைப்புக்கான பொதுக் குழுவின் தலைவர் வர்ணித்தார்.
உலகப் புகழ் பெற்ற இந்தக் கத்தோலிக்க மாதா ஆலயம் எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் 8 ஆம் திகதிகளில் பொதுமக்களுக்காக மீளத் திறக்கப்படவுள்ளது.
பாதுகாக்கப்படவேண்டிய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகிய இந்த ஆலயத்தை ஏப்ரல் 19,2019 அன்று மாலையில் தீ விழுங்கியதையும் அதனால் ஆலயத்தின் உச்சிக் கோபுரம்
தீயில் கருகிய துண்டுகளாகத் தரையில் வீழ்ந்ததையும் முழு உலகமும் அதிர்ச்சியுடன் காண நேர்ந்தது.
தீயினால் அழிந்த ஆலயத்தை மேலும் மெருகுடன் புதிதாகக கட்டியெழுப்பும் ஐந்தாண்டுத் திட்டம் ஒன்றை அதிபர் மக்ரோன் உடனடியாகவே அறிவித்தார். சுமார் 250 கம்பனிகள், நூற்றுக் கணக்கான நிபுணர்கள் புனரமைப்புப் பணியில் களமிறங்க, பல நூறு மில்லியன் ஈரோக்கள் செலவில் ஆலயம் புதுப் பொலிவு பெற்று நிமிர்ந்துள்ளது.
தீ அனர்த்தத்தை அடுத்து மணிக் கோபுரத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட எட்டு மணிகளும் மெருகூட்டப்பட்டு மீண்டும் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. அவற்றில் "கப்ரியேல்"(Gabriel) எனப்படுகின்ற மிகப் பெரிய மணி நான்கு தொன் எடை கொண்டது. 800 கிலோகிராம் நிறை கொண்ட "ஜீன் மேரி"(Jean-Marie) என்ற மணியே எடையில் மிகக் குறைந்தது ஆகும்.
⚫தொடர்புடைய செய்தி: https://www.thasnews.com/post/ந-த-த-ட-ம-ம-த-க-வ-ல-க-ர-ய-ன-உச-ச-ய-ல-தங-கச-ச-வல-ப-ரத-ஷ-ட
தாஸ்நியூஸ் - பாரிஸ்
10-11-2024
Commentaires