பாரிஸ் தெருக்களில் 🔴🟡
திரண்டனர் ரசிகர்கள் 🟢⚫
அரசியல் வேறுபாடுகளை
மறந்து மக்கள் உற்சாகம்
முழு விவரம் :தாஸ்நியூஸ்
பாரிஸ், ஓகஸ்ட், 5
ஒலிம்பிக் சைக்கிளோட்டம் பாரிஸ் தெருக்களில் சனி, ஞாயிறு இரு தினங்களும் நடைபெற்றது. சனிக்கிழமை ஆண்களுக்கான பந்தயத்தை சுமார் ஐந்து லட்சம் பேர் வீதிகளில் திரண்டு
பார்வையிட்டுள்ளனர் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இது ஓர் ஒலிம்பிக் சாதனையா எனத் தெரியவில்லை. எனினும் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கூடியுள்ளனர் என்று
பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் பேச்சாளர் Anne Descamps செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோடை விடுமுறைக்காகப் பலரும் நகரில் இருந்து வெளியேறிச் சென்றுள்ள போதிலும் இத்தனை பேர் போட்டியைப் பார்வையிடத் திரண்டு வந்திருப்பது ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதைக் காட்டுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஈபிள் கோபுரப் பகுதியில் தொடங்கி இறுதியில் அங்கேயே முடிவடைந்த 273 கிலோ மீற்றர்கள் தூர சைக்கிளோட்டம் தலைநகரின் முக்கியத்துவம் வாய்ந்த பல வீதிகள் வழியே பயணித்தது. வீதிகள் நெடுகிலும் இரு புறமும் ரசிகர்கள் வரிசையில் நின்று வீரர்களை உற்சாகப்படுத்தினர். வைற் சேர்ச் எனப்படும் பசிலிக்கா தேவாலயம் அமைந்துள்ள Montmartre குன்றுப் பகுதி வீதிகள் ஊடாகவும் ஓட்டம் நடந்தது.
பெல்ஜியம் நாட்டின் வீரர் Remco Evenepoel ஆண்கள் சைக்கிள் பந்தயத்தில் தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை பிரெஞ்சு வீரர்கள் வென்றனர்.
சைக்கிளோட்டப் போட்டிக்காக பல வீதிகள் முற்றாக மூடப்பட்டதால் தலைநகரில் வாகனப் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்பாக அதற்கு மிகக் குறுகிய கால இடைவெளியில் நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் எந்தக் கட்சி அணிகளும் பெரும்பான்மை பெறாத தொங்கு நாடாளுமன்றத்தை உருவாக்கியிருந்தமை தெரிந்ததே. நாடு அரசியல ரீதியாகப் பிளவுபட்டு நிற்பதை தேர்தல் முடிவுகள் துலாபாரமாகக் காட்டியிருந்தன. ஆனால் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளும் பிரெஞ்சு வீரர்களின் சாதனைகளும் பிளவுண்ட நாட்டை ஒன்றுபடுத்தியுள்ளன. அரசியல் முரண்களை மறந்து அணி திரளச் செய்துள்ளன என்று அவதானிகள் கூறுகின்றனர்.
நீச்சல் சாம்பியன் லேயோன் மார்ஷொன் மற்றும் ஜூடோ ஜாம்பவான் Teddy Riner போன்றவர்களது சாதனைகளும் அவை ஏற்படுத்திய உணர்வலைகளும் நாட்டுமக்களை ஒன்றுபடுத்தியுள்ளன. பாரிஸிலும் நாடெங்கும் ஒலிம்பிக் ரசிகர்களுக்காக நிறுவப்பட்டுள்ள வலயங்கள் ("fan zones") பல்வேறுபட்ட ரசிகர் கூட்டங்களால் நிறைந்து காணப்படுகின்றன.
இதேவேளை - ஜூலை 26 ஆம் திகதி நடந்த தொடக்க விழாவை நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் என்று கூறும் அளவுக்கு 23.4 மில்லியன் பேர் நேரலையில் பார்வையிட்டிருக்கின்றனர். இதன் மூலம் பிரான்ஸில் மிகப் பெரும் எண்ணிக்கையானோர் பார்வையிட்ட நிகழ்வாகச் செய்ன் நதி தொடக்க விழா வரலாற்றில் பதிவாகியுள்ளது.
🔴🟡🟢இன்றைய நிலையில் நாடுகள் பெற்றுள்ள பதக்க நிலைவரம் வருமாறு
தாஸ்நியூஸ் - பாரிஸ்
04-08-2024
Commentaires