top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஐரோப்பிய மன்ற நிதி மோசடி வழக்கு: லூ பென் அம்மையார் நீதிமன்றில் சாட்சியம்

அதிபர் பதவிக் கனவுக்கு

ஆப்பு வைக்குமா தீர்ப்பு..?


பாரிஸ், ஒக்ரோபர், 14


பிரான்ஸில் செல்வாக்குப் பெற்றுவருகின்ற தீவிர வலதுசாரிக் கட்சியின்(Rassemblement national) தலைவி மரின் லூ பென்

அம்மையார் நிதி மோசடி வழக்கு ஒன்றில் இன்று திங்கட்கிழமை சாட்சியமளித்திருக்கிறார்.


ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை முறைகேடாகக் கட்சியின் தேவைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் ஒன்றிலேயே அவருக்கும் அவரது கட்சிக்கும் எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீவிர கவனத்தை ஈர்த்துள்ள இந்த

வழக்கில் முதல் முறையாக அவர் இப்போதுதான் சாட்சியமளித்திருக்கிறார்.


குற்றம்சுமத்தப்படுவதுபோன்ற

நிதி முறைகேடுகள், தவறான கையாள்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என்று குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துரைத்துள்ளார்.


பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம் ஒன்றில் தொடங்கியுள்ள இந்த

வழக்கில் லூ பென் அம்மையாருடன் அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்(MEP) , அவர்களது உதவியாளர்கள், கட்சியின் அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட வேறு 24 பேர் மீதும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளது.


ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை பிரான்ஸில் தங்களது கட்சியின் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கினர் என்பதே இவர்கள் அத்தனை பேரும் புரிந்த மோசடியாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் அவர்களது உதவியாளர்களினதும் செலவுகளுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியை அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் தங்களது கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்காகச் செலவிடக் கூடாது என்பது கட்டாய விதி ஆகும்.


சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்சி Front national (FN) என்ற பெயரில் இயங்கிய சமயத்திலேயே இந்த மோசடி இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இப்போது அதன் பெயர் Rassemblement national என்பதாகும்.


இளம் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா தலைமையில் கட்சி உள்நாட்டில் அதன் தோற்றத்தைச் சீர்படுத்தி மக்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றுவருகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் -


2027 தேர்தலில் லூ பென் அம்மையார் நாட்டின் அதிபராகத் தெரிவாகின்ற வாய்ப்பு மிகப் பிரகாசமாகவுள்ளதாக நம்பப்படும் சமயத்தில் -


இந்த மோசடி வழக்கின் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது கட்சியின் எதிர்காலம் மீது பலத்த தாக்கங்களை ஏற்படுத்தலாம்.


குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்குப் பத்து வருடம் வரையான சிறைத் தண்டனையும் பத்து லட்சம் ஈரோக்கள் அபராதத் தொகையும் விதிக்கப்படலாம். லூ பென் போன்று குற்றம் இளைக்கப்பட்ட சமயத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றப் பதவியில் (MEP) இருந்தவர்களுக்குப் பத்து ஆண்டுகளுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்படலாம்.


இந்த நிதி மோசடிக் குற்றத்தின் மூலம்

3.5 மில்லியன் ஈரோக்கள் நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பிட்டிருக்கிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

14-10-2024




0 comments

コメント


You can support my work

bottom of page