top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஐரோப்பாவின் பாதுகாப்புக்காக பிரான்ஸ் தனது அணு ஆயுதங்களை நிலைநிறுத்துமா?

விவாதிப்பதற்குத் தயார்

அதிபர் மக்ரோன் செவ்வி


"... விளையாட்டின் விதிகள்

மாறிவிட்ட உலகில் ஐரோப்பா

சரியான ஆயுதங்களை ஏந்தாவிட்டால் அழிவு.... "

படம் :மக்ரோன் கடந்த வியாழனன்று சோர்போன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில்

நீண்ட பேருரை ஆற்றிய காட்சி - - - -



பாரிஸ், ஏப்ரல் 28


ஐரோப்பாவின் பொதுப் பாதுகாப்பில் அணு ஆயுதங்களது பங்கு குறித்து விவாதங்களைத் தொடக்குவதற்குத் தயாராக இருப்பதாகப் பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் அறிவித்திருக்கிறார். ஸ்ரார்ஸ்பூவில் வைத்து நாட்டின் கிழக்குப் பிராந்தியப் பத்திரிகை நிறுவனங்களது குழுமத்துக்கு (Ebra group's newspapers) வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இது பற்றிப் பேசியிருக்கிறார்.


ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு (anti-missile defense), நீண்ட தூரம் செல்லும் ஆயுதங்களது பாவனை (firing of long-range weapons) மற்றும் ஐரோப்பிய மண்ணில் உள்ள சொந்தமானதும் அமெரிக்காவினதுடையதுமான அணு ஆயுதங்கள்(nuclear weapons) ஆகியன தொடர்பில் புதிதாக விவாதங்களை ஆரம்பிப்பதற்குத் தயாராக இருப்பதாக

அந்த நேர்காணலில் மக்ரோன் கூறியிருக்கிறார். பிரான்ஸ் தனது தனித்துவத்தைப் பேணுகின்ற அதேநேரம் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு மேலும் பங்களிப்புச் செய்வதற்குத் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


பிரெக்ஸிற் மூலம் இங்கிலாந்து வெளியேறிய பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் சொந்தமாக அணு ஆயுதங்களை (nuclear deterrence) வைத்திருக்கின்ற ஒரே நாடாகப் பிரான்ஸ் மட்டுமே உள்ளது. தனது அணு ஆயுதங்களை அது ஐரோப்பியப் பாதுகாப்புக்காகப் பங்குபோட்டுக் கொள்ளத் தயாராகி வருவதை மக்ரோனின் கருத்து பிரதிபலிப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.


அதிபர் மக்ரோன் கடந்த சில மாதங்களாகவே ஒட்டுமொத்த ஐரோப்பாவினதும் பாதுகாப்பு மீது தீவிர கவனத்தைக் குவிக்கின்ற விதமாகக் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கான சாத்தியங்கள் என்பன போன்ற சர்வதேச நிலைமைகள் ஐரோப்பா தனது பாதுகாப்புத் தனித்துவம் பற்றிச்

சிந்திக்கின்ற அவசியத்தை ஏற்படுத்தி

இருக்கின்றது.


🔵அமெரிக்காவைச் சார்ந்திராத

பாதுகாப்பு மூலோபாயம்..!


பிரான்ஸின் மிகப் பழைய பல்கலைக் கழகமாகிய சோர்போனின்(sorbonne université) மாணவர்கள் மத்தியில் கடந்த வியாழனன்று மக்ரோன் முக்கிய பேருரை ஆற்றியிருந்தார். சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த அவரது உரையில், அமெரிக்காவில் சார்ந்திருக்காத நம்பகமான பாதுகாப்பு மூலோபாயம் ஒன்றைக் கடைப் பிடிக்குமாறு உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார். "விளையாட்டின் விதிகள் மாறிவிட்ட உலகில் ஐரோப்பா அது எதிர்நோக்குகின்ற ஆபத்துகளை எதிர்கொள்ளத்தக்க ஆயுதங்களைக் கொண்டிருக்காதுவிட்டால் செத்துமடியும்" என்றும் எச்சரித்திருக்கிறார்.


இராணுவ, பொருளாதார ரீதியான அழுத்தங்கள் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அத்திவாரத்தை ஆட்டங்காணச் செய்துவிடும். உக்ரைனில் ரஷ்யாவை வெற்றிபெற அனுமதிக்கக் கூடாது. மொஸ்கோவின் எல்லை எதுவரை நீளும் என்பது தெளிவில்லை-என்று மீண்டும் கூறிய அவர், ஐரோப்பாவின் இணையப் பாதுகாப்புத் திறனை (cybersecurity capacity) அதிகரிக்கவும், பிரெக்சிட்டிற்குப் பிந்திய பிரிட்டனுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை அதிகரிக்கவும், உயர்மட்ட இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க ஐரோப்பிய அக்கடமியை உருவாக்கவும் அழைப்பு விடுத்தார்.


ஐரோப்பியர்கள் ஐரோப்பிய இராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்- என்றார்.


"நாம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும், வேகமாக உற்பத்தி செய்ய வேண்டும், ஐரோப்பியப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்-என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

28-04-2024

0 comments

Comments


You can support my work

bottom of page