BMX சைக்கிள் பந்தயம்
அதிரச்செய்த மூவர்! 🔵🟢🟡
பாரிஸ்,ஓகஸ்ட் 3
பிரான்ஸின் வீரர்கள் மூவர் கோடைகால ஒலிம்பிக் வரலாற்றில் இன்றைய தினம் மற்றொரு அபார சாதனையை நிலைநாட்யிருக்கின்றனர். BMX எனப்படும் சைக்கிள் பந்தயத்தில் பிரான்ஸின் Joris Daudet, Sylvain André மற்றும் Romain Mahieu ஆகிய மூவரும்
முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை அள்ளியிருக்கின்றனர்.
மேடு, பள்ளம் நிறைந்த கடுமையான பாதை வழியே சிறிய சைக்கிளை வலித்தும் உடல் பலத்தால் உந்தியும்
செலுத்திச் செல்லும் பந்தயம் BMX
ஆகும்.
கோடைகால ஒலிம்பிக் போட்டி ஒன்றில் பிரான்ஸின் வீரர்கள் இவ்வாறு மூன்று இடங்களையும் வென்று மூன்று பதக்கங்களையும் சூடிக் கொள்வது நூறு ஆண்டுகளில் இதுவே முதலாவது சாதனை ஆகும். கடைசியாக 1924 ஒலிம்பிக் போட்டிகளிலேயே பிரான்ஸின் மூன்று வீரர்களான Albert Séguin,Jean Gounot மற்றும் François Gangloff ஆகியோர் ஜிம்னாஸ்டிக்
போட்டி ஒன்றில் முதல் மூன்று இடங்களையும் வென்றிருந்தனர். கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் கடந்த நூறு ஆண்டுகளாக இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருந்து வந்த அதேசமயம் ரஷ்யாவின் சொச்சியில் (Sochi) 2014 இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸின் Jean-Frédéric Chapuis, Arnaud Bovolenta மற்றும் Jonathan Midol ஆகிய மூவரும் skicross பனிச்சறுக்கல்
போட்டியில் முதல் மூன்று பதக்கங்களையும் வென்று சாதனைபடைத்திருந்தனர். அவர்களது இந்த சாதனை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இன்னமும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔴இன்றைய பதக்க நிலைவரம்
தாஸ்நியூஸ் - பாரிஸ்
02-08-2024
コメント