top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஒலிம்பிக் தொடக்க விழாக் காட்சிகள் இயேசுவின் இறுதி இராப்போசனத்தை கேலிப்படுத்தினவா?

Updated: Jul 30, 2024

ஆயர்கள் தரப்பில் விசனம்

கலைஞர்கள் பக்கம் மறுப்பு


பாரிஸ், ஜூலை, 29


ஒலிம்பிக் தொடக்க விழாவின் ஆற்றுகைக் காட்சிகள் சில இயேசு கிறிஸ்துவின் இறுதி இராப்போசனத்தைச் (Last Supper) சித்திரிக்கின்ற உலகப் புகழ்பெற்ற லியோனார்டோ டா வின்சியின் (Leonardo Da Vinci’) ஓவியத்தைப் பிரதிபலிக்கின்ற விதமாகக் காட்டப்பட்டுள்ளன என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொடக்க விழாவின் கலைத்துவ இயக்குநர் அதற்கு மறுப்பு வெளியிட்டிருக்கிறார்.


பிரபல நாடக அரங்கப் பணிப்பாளரும் ஒலிம்பிக் தொடக்க விழாவின் கலை இயக்குநருமாகிய தோமா ஜொலி என்பவரே இவ்வாறு மறுப்பை வெளியிட்டிருக்கிறார். அரங்க ஆற்றுகை நிகழ்வில் பங்குபற்றிய வேறு சில கலைஞர்களும் தனித்தனியே தங்களது மறுப்பை வெளியிட்டிருக்கின்றனர்.


எந்த மதக் குழுவையும் புண்படுத்தும் விதமாகக் காட்சிகள் அமைக்கப்படவில்லை எனத் தெரிவித்திருக்கின்ற பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, எனினும் எவரேனும் புண்பட்டிருப்பின் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அறிவித்திருக்கிறது.


தொடக்க விழாவின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளில ஒன்று லெஸ்பியன்ஸ், ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலினங்கள் மற்றும் திருநங்கைகள் போன்ற பிரிவினரை உள்ளடக்கிய எல்ஜிபிரிகியூ (LGBTQ+)

சமூகத்தினரை முதன்மைப்படுத்தியதாக அமைந்தது.

நடனக் கலைஞர்கள்,

"drag queens" எனப்படுகின்ற மாற்றுப் பாலின அல்லது ஓரினப் பாலியல் பாத்திரங்களாகத் தோன்றும் பெண்கள் மாற்றுப்பாலின அழகி, ஒர் அரை நிர்வாணப் பாடகர், மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பு அறிவிப்பாளர்கள் எனப் பலர் ஒன்றிணைந்து வழங்கிய அந்த நிகழ்வின் காட்சிப்படுத்துதலே பெரும்

சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்னர் இயேசுநாதர் தனது சீடர்களுடன் (அப்போஸ்தலர்களுடன்) இறுதி உணவை எடுத்துக் கொண்டார் எனக் கூறப்படுகின்ற பைபிளின் "கடைசி இராப்போசனத்தின் "(Last Supper) சித்திரிப்புகளை அந்தக் காட்சி நினைவுபடுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.


சில கத்தோலிக்க நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் பிரான்ஸின் ஆயர்களும் அவை"கிறிஸ்தவத்தை ஏளனம் செய்கின்றவிதமான காட்சிகள்" என்று கூறிக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

படம் :லியோனார்டோ டா வின்சியின் (Leonardo Da Vinci’) "கடைசி இராப்போசனம்"(The Last Supper) என்ற உலகப் புகழ் ஓவியம் இது. ஒலிம்பிக் விழாவின் சர்ச்சைக்குரிய அரங்க நிகழ்ச்சி இந்த ஓவியத்தை ஒத்த காட்சிப்படுத்தலைக் கொண்டிருந்தது எனக் கண்டிக்கப்படுகிறது.

 

ஏற்பாட்டாளர்களால் "எல்லைகள் கடந்த விழா" எனக் குறிப்பிடப்படுகின்ற பாரிஸ் தொடக்க விழா ஒலிம்பிக்கின் வரலாற்றில் முதல் முறையாகத் திறந்த வெளியில் அதுவும் நதி நீரின் மீது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருப்பது தெரிந்ததே. மிகவும் தனித்துவமாக அமைந்த தொடக்க விழாக் காட்சிகள் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. அதேசமயம் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.


பிரான்ஸில் திடீரென நடத்தப்பட்ட பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அரசியல் ஸ்திரமின்மை நீடிக்கிறது. தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவான அரசியல் அலை வீசுகின்றது. இன்னமும் புதிய அரசு ஒன்று நிறுவப்படவில்லை. மக்ரோனின் முன்னாள் பிரதமர் கப்ரியேல் அட்டால் தலைமையிலான காபந்து அரசின் நிர்வாகத்தின் கீழேயே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அது தொடர்பான எல்லா விமர்சனங்களின் மீதும் அரசியல் நிழல் படிந்துள்ளது.


மரின் லூ பென் அம்மையாரது தீவிர வலதுசாரிக் கட்சியின் பேச்சாளர் ஒருவர், ஒலிம்பிக் தொடக்க விழா "பிரெஞ்சுப் பண்பாட்டைச் சூறையாடியிருக்கிறது" - எனக் குற்றம் சுமத்தி உள்ளார். அதேசமயம் மொஸ்கோவில் பேசிய ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், பாரிஸ் செய்ன் நதி விழாவை "ஓரினச்சேர்கையாளர்களின் மாபெரும் அணிவகுப்பு" எனக் கூறி வர்ணித்திருக்கிறார்.


இதேவேளை, மகாராணியின் துண்டிக்கப்பட்ட தலையைக் காட்டும் விதமான ஒரு காட்சியும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.


பிரான்ஸின் மகாராணி மேரி

அந்துவானெற் (Marie-Antoinette) 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின்

போது சிறைவைக்கப்பட்ட பின்னர் கணவர் லூயி XVI(Louis XVI) மன்னருடன் சேர்த்துத் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. புரட்சிக் காலத்தில் மகாராணி சிறைவைக்கப்பட்டிருந்த அதே அரண்மனையின் ஜன்னல் வழியாகப் பெண் ஒருவர் துண்டித்து ரத்தம் வழிகின்ற தலையுடன் தோன்றுவது

போன்ற காட்சியும் ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது வெளிப்பட்டது.

இதனை விமர்சித்துள்ள தீவிர இடதுசாரி அரசியல் தலைவராகிய ஜோன் லூக் மெலன்சோன், "மரண தண்டனையும் மகாராணியின் தலை துண்டிப்பும் நாங்கள் மீண்டும் பார்க்க விரும்பாத ஒரு தண்டனை வழங்கும் சகாப்தத்துக்குரியவை" - எனத் தெரிவித்து அதனைக் காட்சிப்படுத்திய செயலைக் கண்டித்துள்ளார்.


இவ்வாறு ஒரு வரலாற்றுக் காட்சியை இணைத்துக் கொண்டதற்குப் பின்னால் மரண தண்டனையையோ அல்லது பிரான்ஸில் அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த

கியோட்டின் (guillotine) என்ற தலை துண்டிக்கும் தண்டனை முறையையோ மீளவும் அறிமுகப்படுத்தும் எண்ணம் எதுவும் கிடையாது என்று ஒலிம்பிக் கலை இயக்குநர் தோமா ஜொலி தெரிவித்திருக்கிறார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

29-07-2024






0 comments

Comments


You can support my work

bottom of page