கலவரத்தை அடுத்து முடிவு
விமான நிலைய வீதியை
மீட்கப் "படை நடவடிக்கை"
Photo AFP —
பாரிஸ், மே 19
ஒலிம்பிக் தீப் பந்தம் அதன் நீண்ட சுற்றுப் பயணத்தின் வழியில் நியூ கலிடோனியாத் தீவுக்குச்(Nouvelle-Calédonie) செல்லமாட்டாது.
அரசு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என்று பிரதமர் கப்ரியேல் அட்டால் அறிவித்திருக்கிறார்.
பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள
பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் ஒன்றாகிய நியூகலிடோனியாவில் கடந்த சில நாட்களாகப் பெரும் வன்செயல்கள் தலைவிரித்திருப்பது வாசகர்கள் அறிந்ததே. அதனை அடுத்தே ஒலிம்பிக் தீபத்தை அங்கு எடுத்துச் செல்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் பெருநிலப்பரப்பில் ஆரம்பமாகியுள்ள ஒலிம்பிக் தீப் பந்தத்தின் பயணம் கடல் கடந்த நிர்வாகப் பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது. அந்த வழியில் ஜூன் 11 ஆம் திகதி அது நியூ கலிடோனியாவைக் கடந்து செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு நீடிக்கின்ற வன்செயல்கள் காரணமாக நியூ கலிடோனியா மக்கள் தீபத்தைப் பார்க்கின்ற வாய்ப்பை இழந்துள்ளனர்.
இதேவேளை, வீதி வன்செயல்களில் ஈடுபட்டு வருவோர் அங்கு தலைநகர் நௌமியாவைப் பிரதான விமான
நிலையத்துடன் இணைக்கின்ற நெடுஞ்சாலையில் தடைகள் போடப்பட்டுப் போக்குவரத்தை
தடைசெய்ததுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவருகின்ற அந்த வீதியை மீட்டு தடைகளை நீக்குவதற்காகப் பெரும் படை நடவடிக்கை ஒன்று அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 600 ஜொந்தாம் வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
வன்செயலில் ஈடுபடுவோர் தமக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காகச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை அடுத்து பிரான்ஸ் அரசு பிரபல ரிக்ரொக் தளத்தை அங்கு தற்காலிகமாகத் தடை செய்துள்ளது.
நியூகலிடோனியாவின் பிரதான விமான நிலையம் இராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் உள்ளது.
தீவுக் கூட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் அமைதி திரும்பியுள்ள போதிலும் தலைநகரில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் நீடித்து வருகின்றன.
கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்றுவருகின்ற வன்செயல்களில் இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்க்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பெருமளவு பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நியூகலிடோனியாவின் சுதந்திரத்துக்கு ஆதரவான மற்றும் எதிரான தரப்புகளுடன் பாரிஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
🟠எதற்காக அங்கு வன்முறை?
நியூ கலிடோனியா தீவுக் கூட்டங்களில்
தற்காலிகமாகக் குடியேறியவர்கள் அங்கு நடைபெறுகின்ற மாகாணத் தேர்தல்களில் வாக்களிப்பதை அனுமதிக்கும் வகையிலான அரசமைப்புச் சட்டத் திருத்தம் பாரிஸில் நிறைவேற்றப்பட்டிருப்பதன் எதிரொலியாகவே அங்கு கலவரங்கள் வெடித்துள்ளன.
நியூ கலிடோனியாவில் பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் வசிக்கின்ற பிரெஞ்சுக் குடிமக்கள் அங்கு நடைபெறும் மாகாணத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குகின்ற சட்டத் திருத்தம் பிரான்ஸின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது ஜனநாயக ரீதியாக நியாயமானது என்று அதனை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் இந்தச் சட்டத் திருத்தம் தீவின் உள்ளூர்வாசிகளைச் சீற்றமடையச் செய்துள்ளது. நியூ கலிடோனியாவின் பழங்குடிகளான கனாக்(Kanak) இன மக்களை ஓரங்கட்டி அவர்களது வாக்களிப்பு வீதத்தைக் குறைத்துவிடும் என்பது சட்டத்தை எதிர்ப்போரது வாதமாக உள்ளது.
கலிடோனிய மக்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிரானிஸிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திரத் தனிநாடாக வாழ்வதற்கு ஆசைப்படுகிறார்களா என்பதை அறிவதற்காக அங்கு மூன்று முறை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. மூன்று வாக்கெடுப்புகளிலும் அவர்கள் பிரிந்து செல்வதை நிராகரித்திருந்தனர். மூன்றாவது வாக்கெடுப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாப் பெருந் தொற்று நோய்க் காலப்பகுதியில் நடைபெற்றிருந்தது.
தொற்றுநோய்க் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த வாக்கெடுப்பு முழுமை பெறவில்லை என்று பிரிந்து செல்வதை ஆதரிக்கின்ற தரப்பினர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்திருந்தனர்.
கலிடோனியாவின் பிரிவினையை ஆதரிப்போரே தற்சமயம் அங்கு நடைபெறுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்செயல்களின் பின்னணியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
18-05-2024
Kommentare