பயங்கரவாத அச்சுறுத்தல்
பாரிஸ் நிகழ்வை தடுக்காது
என்று அமைச்சர் தெரிவிப்பு
Photo :கணனி வடிவமைப்பில் தொடக்க விழா மாதிரிக் காட்சி. - - - - - - - -
ஒலிம்பிக் தொடக்க விழா திட்டமிட்டபடி செய்ன் நதியில் நடத்தப்படும் என்றும்
பாதுகாப்புக் காரணங்களுக்காக மாற்றுத் திட்டம் (பிளான் B) எதுவும் அவசியமில்லை என்றும் பிரான்ஸின் விளையாட்டுத் துறை அமைச்சர் அமேலி ஊடியா-காஸ்ரெரா (Amelie Oudea-Castera) தெரிவித்திருக்கிறார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா பயங்கரவாதத் தாக்குதல் இலக்காக மாறுமா என்றவாறான பாதுகாப்புக் கவலைகள் எழுந்துள்ள நிலையிலேயே
அமைச்சர் இவ்வாறு தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னமும் ஆறு மாதகாலம் மட்டுமே எஞ்சி இருக்கின்ற நிலையில் பாரிஸில் அதன் ஆரம்ப விழாவை நடத்தப் பாதுகாப்பு நிலைவரம் இடமளிக்குமா
என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தின் எதிரொலியாக பிரான்ஸில் இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்
அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
தலைநகரில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈபிள் கோபுரப் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மீது நடத்தப்பட்ட
தாக்குதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி எந்த இடத்திலும் - நகரின் இதயப் பகுதிகளிலும் - பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
இவ்வாறான பாதுகாப்புப் பலவீனத்தின் மத்தியில்
பல லட்சக் கணக்கான வெளிநாட்டுப் பார்வையாளர்களுடன் நகரின் மத்தியில் திறந்த வெளி அரங்கில் - செய்ன் நதி மீது - ஒலிம்பிக் தொடக்க விழாவைத் திட்டமிட்டபடி நடத்த இயலுமா என்ற கேள்வியை எதிரணி அரசியல்வாதிகள் எழுப்புகின்றனர்.
பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ஏற்கனவே திட்டமிட்டுள்ள ஆரம்ப விழாவுக்குப் பதிலான மாற்றுத் திட்டம் ஒன்றை- "பிளான் - பி" ஏற்பாடு ஒன்றை-இப்போதே தயார் செய்யுமாறு பாரிஸ் பிராந்தியமாகிய இல்-து-பிரான்ஸை நிர்வகிக்கின்ற வலதுசாரிக் கட்சியின்
பிரமுகர் ஒருவர் மக்ரோன் அரசிடம் கேட்டிருக்கிறார்.
இவ்வாறான கோரிக்கைகளை அடுத்தே விளையாட்டுத் துறை அமைச்சர் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாகச் செய்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக அதன் தொடக்க விழா மூடிய விளையாட்டு அரங்கம் ஒன்றுக்குப் பதிலாகத் திறந்த வெளியில்-செய்ன் நதியின் மீது- நூற்றுக்கு மேற்பட்ட மிதவைப் படகுகளில் மிகக் கோலாகலமாக நடத்தப்படவிருப்பது தெரிந்ததே.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
04-12-2023
Comments