இன்னும் நூறு நாள்கள்..
விழாக்கோலம் கொள்ள
தயாராகின்றது பாரிஸ்!!
பாரிஸ், ஏப்ரல் 10
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு
இன்னமும் நூறுக்கும் குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில் விழா ஏற்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள்
வெளியாகி வருகின்றன.
பாரிஸின் மையத்தில் அதன் முக்கிய அடையாளமாகிய- 135 ஆண்டுகள் பழமைவாய்ந்த - ஈபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் விளையாட்டின் பிரபல அடையாளங்களாகிய ஐந்து வளையங்களும் (Olympic rings) பொருத்தப்படவுள்ளன என்ற தகவலை ஏற்பாட்டுக்குழு அறிவித்திருக்கின்றது.
மீள்சூழற்சிக்குப் பயன்படுத்தக்கூடிய இரும்பினால் 29 மீற்றர்கள் நீளமும் 15 மீற்றர்கள் உயரமும் கொண்ட கட்டமைப்பில் ஐந்து வளையங்களும்
உருவாக்கப்பட்டுள்ளன.
உலகின் ஐந்து கண்டங்களையும் குறிக்கின்ற இந்தப் பஞ்சவர்ண ஐந்து வளையங்களும் ஈபிள் கோபுரத்தின் முதலாவது இரண்டாவது தளங்களுக்கு
இடையே இந்த மாத இறுதியில் பொருத்தப்படவுள்ளன. கோபுரத்தில், சுமார் பத்தாயிரத்து 500 விளையாட்டு வீரர்கள் படகுகள் மீது அணிவகுத்து வரவுள்ள செய்ன் நதியின் பக்கமாக அவை காட்சியளிக்கும்.
வழக்கமாக மூடிய அரங்குகளில் நடத்தப்பட்டுவருகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழா இம்முறை திறந்த வெளியில் - செய்ன் நதி நீரின் மேல்- நடைபெறவிருப்பது வாசகர்கள் அறிந்ததே. நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆரம்ப விழாவைப் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ள
ரசிகர்களது எண்ணிக்கை சில லட்சங்களால் குறைக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரில் போட்டிகள் நடைபெறவுள்ள பகுதிகள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்படவுள்ளன.
🔵தொடர்புடைய செய்திகள் https://www.thasnews.com/post/ப-ர-ஸ-ஒல-ம-ப-க-பதக-கங-கள-ல-ஈப-ள-க-ப-ரத-த-ன-இர-ம-ப-த-த-ண-ட
தாஸ்நியூஸ் - பாரிஸ்
10-04-2024
Comentários