அதிவேகம் காரணமாக
தடத்தை விட்டு ஓட்டம்!
பாரிஸ், ஒக்ரோபர் 28
ட்ராம் ஒன்று தடத்தை விட்டு விலகி ஓடிக் கடைக்கட்டடம் ஒன்றினுள் புகுந்து நிற்கின்ற காட்சியையே படத்தில் காண்கிறீர்கள்.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோ நகரின் மையத்தில் இன்று நடந்த மிக அரிதான விபத்துச் சம்பவம் இது. கார்கள், பஸ்கள் அருகே உள்ள கட்டடங்களுக்குள் பாய்கின்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் ட்ராம் தொடரூந்து ஒன்று அதி வேகம் காரணமாகத் தடத்தை விட்டு விலகி அருகே கட்டடத் தொகுதி ஒன்றில் அமைந்திருந்த "அப்பிள்" தொலைபேசி மொத்த விற்பனைக் கடைக்குள் (Apple retail store) புகுந்த இந்தச் சம்பவம் செய்தி ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளது.
ட்ராம் வண்டி தடத்தை விட்டு இடது பக்கமாக ஓடி வேகமாக கடைக்குள் புகுந்தபோது எழுந்த பெரும் ஓசை அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நேரில் கண்டவர்கள் கூக்குரலிட்டனர். கடையின் உள்ள நின்றிருந்த மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். ட்ராம் சாரதிக்கும் பயணிகள் மூவருக்கும் காயமேற்பட்டது. அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. எனினும் விசாரணைகள் இடம்பெறுவதாக ஒஸ்லோ தலைமைப் பொலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
28-10-2024
Comments