top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

குஜராத் சுரங்கத்தில் கண்டுபிடித்தவை வாசுகிப் பாம்பின் உடல் எச்சங்கள்!

வரலாற்றுக்கு முந்திய

புராணக் கதைகள்

நிஜமாகும் தருணம்

படம் : குஜராத் பானந்த்ரோவில் உள்ள பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தின் ஒரு தோற்றம்.

 

பாரிஸ், ஏப்ரல் 20


குஜராத் மாநிலத்தில் நிலக்கரிச்

சுரங்கம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட உலகில் பெரியதும் மிக நீளமானதுமான பாம்பு இனங்களில் ஒன்றின் புதை படிவ எச்சங்கள் வாசுகிப் பாம்பினத்தைச் சேர்ந்தவை (Vasuki Indicus) என்று இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.


அமெரிக்காவின் இயற்கை அறிவியல் தகவல் சஞ்சிகை (Scientific Reports) இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.


இந்து மதத்துடன் தொடர்புடைய புராண இதிகாசங்கள் இந்துக் கடவுளாகிய சிவன் வாசுகிப் பாம்பையே கழுத்தில் மாலையாக அணிந்திருக்கிறார் எனக் கூறுகின்றன. வாசுகி என்பது சிவனுடன் தொடர்புடைய பாம்புகளின் அரசரது பெயரில் இருந்து வந்தது என்றும் புராணக் கதைகள் ஊடாக நம்பப்படுகிறது.

47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்

உலகம் இப்போது இருப்பது போன்று காணப்படாத மத்திய ஈயோசீன் (Middle Eocene) காலப்பகுதியில் வாசுகிப் பாம்புகள் (Vasuki Indicus) இன்றைய ஆசிய, ஆபிரிக்கக் கண்ட நிலப்பரப்புகளில் வாழ்ந்துவந்தன

என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிறுவுகின்றனர்.


குஜராத்தின் குச் மாவட்டத்தில் (Kutch district) பானந்த்ரோவில் (Panandhro)

அமைந்துள்ள பழுப்பு (Ignite) நிலக்கரிச் சுரங்கத்திலேயே பாம்பின் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.


எச்சங்கள் முழுமையாகக் கிடைக்காவிடினும் வரிசையாக அதன்

முள்ளந்தண்டு எலும்புகளில் 27 துண்டங்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அந்தப் பாம்பு குறைந்தது 39முதல் 49 அடி(11-19 மீற்றர்கள்) நீளமும் குறைந்தது ஒரு மெற்றிக் தொன் எடையும் கொண்டதாக இருக்கலாம் என்றும் அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

"வாசுகி அதன் உடற்பருமனின் அடிப்படையில் மிக மெதுவாக நகரும். பதுங்கியிருந்து வேட்டையாடும் விலங்கு, அது அனகொண்டாக்கள் மற்றும் மலைப்பாம்புகள் போன்றே உடலால் சுற்றி இறுக்குவதன் மூலம் அதன் இரையை அடக்கும்.  உலகின் வெப்பம் இன்றைக்கு இருப்பதை விட மிக அதிகமாக இருந்த காலத்தில் கடற்கரைகளுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலங்களில் இந்த வகைப் பாம்புகள் வாழ்ந்தன"


-இவ்வாறு இந்தியன் இன்ஸ்ரிரியூட் ஒப் டெக்னொலெஜி ரூர்க்கியில் (Indian Institute of Technology Roorkee - IITR) பழங்காலவியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளரான தேபாஜித் டாட்டா

(Debajit Datta) என்பவர் தெரிவித்துள்ளார்.


வாசுகி ஒரு கம்பீரமான அதேசமயம் மென்மையான ராட்சத உருவம் கொண்ட விலங்காக இருந்திருக்கலாம் நாளின் பெரும்பாலான நேரம் தனது உடலைச் சுருட்டிக் கொண்டு உறங்கும். அல்லது சதுப்பு நிலங்களில் முடிவிடம் இல்லாத ரயில் போல நகர்ந்து கொண்டிருக்கும். அது எனக்கு "த ஜங்கிள் புக்கில்" வருகின்ற ராட்சதக் கற்பனைப் பாம்பாகிய காவை (fictional giant snake Kaa) நினைவுபடுத்துகிறது - என்றும் டாட்டா ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் விளக்கியுள்ளார்.


வாசுகிப் பாம்புக்கு முன்னர் கொலம்பியாவின் வடக்குப் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் 2009 ஆம் ஆண்டு டைட்டானோபோவா (Titanoboa) என்ற மலைப்பாம்பின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. 58-60 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய இந்தவகைப் பாம்புகள் சுமார் 42 அடி நீளமானதும் 1.1 மெற்றிக் தொன் எடைகொண்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

20-04-2024









0 comments

Comments


You can support my work

bottom of page