வழமை மாறிய ஈரப்பதனால்
வசந்தகால பயிர்கள் வாட்டம்
பாரிஸ், ஏப்ரல் 21
மே மாதம் நெருங்குகின்றது. ஆனாலும் ஐரோப்பாவின் பல நாடுகளில் குளிர் மற்றும் உறைபனி தொடர்ந்து நீடிக்கிறது. பிரான்ஸின் பெரும் பகுதிகளில் இரவில் வெப்பநிலை எதிர்மறைக்குச் செல்கிறது. காலையில் உறைபனி மூட்டத்தையும் ஈரப்பதனுடன் கூடிய குளிரையும் அனுபவிக்க முடிகிறது.
வசந்த கால ஆடைகளைத் தவிர்த்து போர்த்து மூடிக் குளிர் உடுப்புகளுடன் வெளியே நடமாட வேண்டி உள்ளது என்று பாரிஸ் வாசிகள் சினக்கின்றனர்.
இந்தவாரம் முழுவதும் நீடித்த இதுபோன்ற ஈரப்பதனுடன் கூடிய குளிர்மையும் உறைபனியும்
அடுத்த வார நடுப்பகுதி வரை தொடரும் என்று வானிலை அவதான நிலையம் மெத்தியோ பிரான்ஸ் (Météo France) தெரிவித்துள்ளது.
மேற்கு ஐரோப்பாவில் ஒர் எதிர்ப்புயல் மற்றும் கிழக்கில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு தோன்றியிருப்பதன் காரணமாக வடக்கு நோக்கி ஒரு "ஜெற் ஸ்ட்ரீம்" -ஒடுங்கிய குளிர் காற்றோட்டம் - உருவாகியுள்ளது. அதுவே இப்போதைய குளிர்மைக்குக்
காரணம் என்று விளக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் முதல் பல்கன் நாடுகளைத் தாண்டிக் வடக்கு ஐரோப்பாவரை நீடிக்கின்ற பருவம் தவறிய இந்தக் குளிரும் உறைபனியும் குருத்து விடும்
பயிர்கள், மொட்டு விடும் பழமரங்கள், வைன் முந்திரிகைத் தோட்டச் செடிகளில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. பிரான்ஸின்
வைன் தோட்டங்களில் ஏற்கனவே குருத்துகளை உறைபனி தாக்கத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் முறையிட்டிருக்கின்றனர்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
21-04-2024
Comments