அமைதியாக வாக்குப் பதிவு
விரிவான செய்திக்கு ThasNews.Com
பாரிஸ், ஜூலை 07
பல மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்கள் கோடை விடுமுறைப் பயணங்களைத் தொடங்கியுள்ள நிலையிலும் நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்குப் பதிவு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. நண்பகல் வரை 26.63%
வாக்குகள் பதிவாகியுள்ளன என்று
உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதலாவது சுற்றில் மதிய நேரம் வரை பதிவான வாக்கு வீதத்தைவிட இது சுமார் ஒரு வீதத்தால் அதிகமாகும்.
முதலாவது சுற்றில் முதலிடம் பெற்ற தீவிர வலதுசாரிக் கட்சியை மேலும் முன்னேற விடாது தடுப்பதற்கான எதிரணி வியூகங்கள் பலமாக உள்ள நிலையில் நாடெங்கும் இன்றைய வாக்களிப்பு ஒரு வித பதற்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது. முதற்சுற்று வாக்களிப்புக்குப் பின்னர் இன்றுவரையான ஒரு வார காலத்தில் தேர்தலுடன் தொடர்புடைய சுமார் ஐம்பது வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பிரான்ஸின் தேர்தல் வரலாற்றில் இவ்வாறு வன்செயல்கள் நேர்ந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இன்றைய வாக்களிப்பு அமைதியாக நடைபெற்று வருகின்றது.
நீண்ட கோடை விடுமுறைக் காலம் தொடங்குகின்ற முதலாவது
வார இறுதி நாள் இன்றாகும். சுமார் இருபது மில்லியன் பிரெஞ்சு மக்கள் விடுமுறைப் பயணங்களில் செல்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிஸ் உட்பட பெரு நகரங்களில் இருந்து செல்லும் வீதிகளில் பல நூறு கிலோமீற்றர்கள் தூரத்துக்கு வாகன நெரிசல்கள் காணப்படுகின்றன. ஆனால் இவை எதுவுமே வாக்களிப்பு வீதத்தில் தாக்கம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
இன்று காலையில் நேரத்துடன் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று விட்டுக் கையோடு விடுமுறைப் பயணத்தை ஆரம்பிக்கின்றோம் என்று வாக்காளர்கள் பலர் செய்தி ஊடகங்களிடம் கூறியிருக்கின்றனர்.
இம்முறை தேர்தலின் முக்கியத்துவம்
கருதி வாக்களிப்பதற்காகப் பயணங்களை ஒத்தி வைத்துள்ளோம் என்று மேலும் பலர் சொல்கின்றனர்.
அதேசமயம் இன்னொருவருக்காக வாக்குச் செலுத்தப் பதிவு செய்தவர்களது எண்ணிக்கை இந்த முறை உச்சங்களை எட்டியுள்ளது.
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளதால் பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் இந்த முறை கோடை வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து விடுமுறையைத் நாட்டுக்குள்ளேயே கழிப்பதற்காகுத்
தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமைகளும் வாக்களிப்பு வீதம் குறையாமல் இருப்பதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
அதிபர் மக்ரோன் உட்பட முக்கிய அரசுப் பிரமுகர்களும் கட்சித் தலைவர்களும் வாக்களித்த காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியுள்ளன.
பிந்திய தகவல்கள் அடுத்த செய்திப் பதிவுகளில்...
தாஸ்நியூஸ் - பாரிஸ்
07-07-2024
Comentários