மிசெல் பார்னியர் அறிவிப்பு
"பிரான்ஸின் ஜோ பைடன்"
வயதில் மிக மூத்த பிரதமர்
தனது கடமைகளை ஏற்றார்
பாரிஸ், செப்ரெம்பர் 7
குடிவரவைக் கட்டுப்படுத்துவதற்குக் கடுமையான கொள்கைகளைப் பின்பற்றப் போவதாக பிரான்ஸின் புதிய பிரதமர் மிசெல் பார்னியர் அறிவித்திருக்கிறார்.
குடிவரவு தொடர்பில் மரின் லூ பென்னின் கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாவிடினும் அவற்றை மதிக்கிறேன். நாட்டின் எல்லைகளில் உள்ள ஓட்டைகளே கட்டுப்பாடற்ற விதமான குடியேறிகள் படையெடுப்புக்குக் காரணம் என்ற உணர்வு நாட்டில் உள்ளது-என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
73 வயதான பழமைவாத அரசியல் தலைவர் மிசெல் பார்னியர் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், வழங்கிய முதலாவது நேர்காணல் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்தார்.
மக்ரோன் அரசின் செல்வாக்கு வீழ்ச்சிக்கு வழிவகுத்த சர்ச்சைக்குரிய ஓய்வூதியச் சீரமைப்புச் சட்டம் உட்பட அவரது முக்கிய கொள்கைகளை ஆதரிக்கப் போவதாகவும் புதிய பிரதமர் கூறியிருக்கிறார்.
"மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நிறைவேற்றப்பட்ட ஓய்வூதியச் சீரமைப்புச் சட்டத்தை நாம் கேள்விக்குள்ளாக்கக் கூடாது. ஆனாலும் அதனால் பாதிக்கப்படக்கூடிய பலவீனமான தரப்பினரது நன்மை கருதி அதில் சில சமாளிப்புகளைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்."
-இவ்வாறு பார்னியர் தெரிவித்தார்.
புதிய பிரதமர் அடுத்த சில வாரங்களில் தொங்கு நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டின் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றிமுடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வலதுசாரிகளினதும், மக்ரோனின் மையவாதத் தரப்பு எம்பிக்களினதும் ஆதரவு அவருக்குக் கிடைக்கும் நிலை காணப்படுகிறது. இடதுசாரிகள் தரப்பில் இருந்தும் அவர் ஆதரவை எதிர்பார்க்கிறார். "செயற்பாட்டு ரீதியான அரசாங்கம் ஒன்றை இயக்குவதில் விருப்பம் உள்ள சகலருக்கும் தமது கதவுகள் திறந்தே உள்ளன" என்று பிரதமர் கூறியிருக்கிறார். நாடாளுமன்றில் கூடிய ஆசனங்களைக் கொண்டுள்ள தனிப்பெரும் கட்சியான மரின் லூ பென் அம்மையாரது தீவிர வலதுசாரிக் கட்சி புதிய பிரதமரை வெளிப்படையாக ஆதரிக்காவிட்டாலும் முக்கிய பிரேரணைகளில் அவரை எதிர்க்கமாட்டாது என்று நம்பப்படுகிறது.
தேர்தலில் அதிக ஆசனங்களை வென்ற இடதுசாரிகளது முன்னணி நியமித்த பிரதமர் வேட்பாளரை நிராகரித்து விட்டு, வலதுசாரிகள் தரப்பில் இருந்து ஒருவரைத் தனது இஷ்டத்துக்குப் பிரதமராக நியமித்த மக்ரோனின் செயல் இடதுசாரிக் கட்சிகளைச் சீற்றமடையச் செய்துள்ளது. மக்கள் தீர்ப்பின் அடிப்படையிலான தேர்தல் முடிவுகள்
கொள்ளையிடப்பட்டுள்ளன என்று தீவிர இடதுசாரி ஜோன் லூக் மெலன்சோன் கடுமையாகச் சாடியுள்ளார். புதிய பிரதமர் நியமனத்தை எதிர்த்து இன்று சனிக்கிழமை நாடெங்கும் மக்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் பேரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அட்டால் வெளியேறினார்
காபந்துப் பதவியை வகித்து வந்த பிரதமர் கப்ரியேல் அட்டால் தனது பொறுப்புக்களைப் புதிய பிரதமர் மிசெல் பார்னியரிடம் ஒப்படைக்கின்ற வைபவம் பிரதமர் மாளிகை முன்பாக நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
நாட்டின் வயதில் மிக இளைய பிரதமரிடம் இருந்து வயதில் மிக மூத்த பிரதமர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட வைபவமாக அது வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. 83 வயதான மூத்த அரசியல்வாதி மிசெல் பார்னியரை அவருக்கு நெருக்கமானவர்கள் "பிரான்ஸின் ஜோ பைடன்" என்று அழைக்கின்றனர். அவரது சுமார் ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் அதற்கு ஒரு காரணமாகும்.
பிரான்ஸில் வயதில் மிக மூத்த
பிரதமர் என்ற பெருமையைப் பார்னியர் பெற்றுக்கொள்கிறார். அதேசமயம்
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பிரதமராக நியமிக்கப்பட்டவர் கப்ரியேல் அட்டால். அப்போது அவருக்கு வயது 35. நாட்டில் வயதில் மிக இளைய பிரதமர் என்ற அடையாளம் அவருக்குக் கிடைத்தது.
புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
07-08-2024
Comments