நடமாட்டங்களை தவிர்க்க
பொலீஸார் அறிவுறுத்தல்
பாரிஸ், ஒக்ரோபர் 09
"கீர்க்" எனப் பெயரிடப்பட்டுள்ள தாழமுக்கம் (la dépression Kirk) காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை இன்று புதன்கிழமை முழு நாளும் நீடிக்கின்றது. அது நாளையும்
தொடரலாம் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
தலைநகர் பாரிஸ் உட்பட பல்வேறு பகுதிகளிலும் அடை மழை காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.
நாடெங்கும் 35 நிர்வாக மாவட்டங்களில்
மழை, மற்றும் புயல் மழைக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange) விடுக்கப்பட்டிருக்கிறது.
தலைநகர் பாரிஸ் பிராந்தியம் உட்பட பெரும்பாலான இடங்களில் சுமார் ஒருமாதகாலம் பெறுகின்ற மொத்த மழை வீழ்ச்சியின் அளவு இன்று ஒரு நாளில் பதிவாகியிருக்கிறது. இதனால் வெள்ள நிலைமை தோன்றியுள்ளது. நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. பிராந்தியங்களுக்கான ரயில் சேவைகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டுள்ளன. நெடுஞ்சாலைப் போக்குவரத்துகளும் வெள்ளத்தால் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன.
கீர்க் தாழமுக்கத்தால் மிக அதிகமாகப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் பகுதியாகப் பாரிஸ் பிராந்தியத்தின் சீன் - ஏ-மான்(Seine-et-Marne) நிர்வாக மாவட்டம் காணப்படுகிறது. அங்கு காலநிலை அனர்த்த எச்சரிக்கையின் அதி உச்சக் குறியீடான சிவப்பு எச்சரிக்கை(vigilance rouge) இன்று மாலை முதல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சீன்-ஏ-மான் பகுதியைக் கடக்கின்ற மொறின் பேராற்றில் (le Grand Morin) தண்ணீர் மட்டம் இன்று கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து ஆற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கின்ற குடியிருப்பாளர்களுக்கு வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் அனர்த்த நெருக்கடிகால ஏற்பாடுகளை உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
வீடுவாசல்களை விட்டு வெளியேறுவோர் தங்குவதற்காகத் தற்காலிக இருப்பிடங்கள் ஏற்பாடாகியுள்ளன. வெள்ளிக்கிழமை வரை வெளி நடமாட்டங்களைத் தவிர்க்குமாறு பிராந்தியப் பொலீஸ் நிர்வாகப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பாடசாலை பஸ் சேவைகள் வியாழக்கிழமை காலை இடம்பெறமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ் ThasNews.Com
09-10-2024
Comments