top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

குரங்கு அம்மை : தொற்றாளர்கள் பின்பற்றும் விதிகள் அறிவிப்பு


பிரான்ஸில் குரங்கு அம்மை வேகமாகப் பரவி வருகிறது. ஜூலை 5 ஆம் திகதி வரை 577 தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று

நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை

(Santé Publique France) தெரிவித்துள்ளது. இந்த நிலையில்

பெரிதும் பரீட்சயம் இல்லாத இந்த

அம்மை நோயால் பீடிக்கப்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பு வைத்தவர்கள் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறான விதிகளைப் பின்பற்ற வேண்டும்?


🔵மருத்துவமனையில் சேர்க்கப்படவேண்டிய நிலையில் இல்லாத தொற்றாளர்கள் மூன்று வாரங்களுக்குத் தங்களைத் தாங்களே மாஸ்க் அணிந்த நிலையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் -


🔵அவர்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்கு அல்லது வீட்டில் இருந்து தொழில் செய்வதற்கு(full-time telework) அவர்களது மருத்துவர் அனுமதிவழங்கலாம்.


🔵ஒரே வீட்டுக்குள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வோர் தங்களது, படுக்கை, உடைகள், பாவனைப் பொருள்களை அடுத்தவர் அணுகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


🔵எவருடனும் உடல் ரீதியான தொடர்புகளைத் தவிர்க்கவேண்டும். நோய் அறிகுறி தென்பட்ட நாளில் இருந்து அடுத்த 21 நாட்களுக்குள் பாலியல் உறவுகொள்ளக் கூடாது.


🔵தங்களுக்குத் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும் வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளவும் உரித்துடையவர்களாவர்.


🔵தொற்றாளர்களுடன் ஆபத்தான விதத்தில் தொடர்பு கொண்டவர்கள் தங்களது ஆய்வுகூடப் பரிசோதனை முடிவு வரும் வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம்.


🔵 நோய்த் தொற்றின் முதல் அறிகுறி காய்ச்சல் ஆகும். தனிமைப்படுத்தல் காலத்தில் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் உடல் வெப்ப நிலையைப் பரிசோதித்தல் அவசியம்.


🔵தனிமைப்படுத்தலில் உள்ள காலப் பகுதியில் ஒருவர் ஆபத்தான கட்டத்தை அடையநேரிட்டால் நேரே மருத்துவமனைக்கோ மருத்துவரிடமோ செல்வதைத் தவிர்த்து 15 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்க வேண்டும்.


🔵தொற்றாளர் ஒருவருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டது உறுதியாகத் தெரிந்தால் நான்கு நாட்களுக்குள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது பாதுகாப்பானது.


-இந்த விவரங்களைப் பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பாரிஸில் உள்ள பொது மருத்துவமனைகள் சிலவற்றில் அம்மை நோய்த் தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் ஜூலை 11 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன.


பாரிஸ் நகரின் Bichat மற்றும் Pitié-Salpêtrière மருத்துவமனைகளில் தடுப்பூசி நிலையங்கள் ஏற்கனவே

ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

__________________

06-07-2022 தாஸ்நியூஸ் - பாரிஸ்.


0 comments

Comments


You can support my work

bottom of page