top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

கொழும்பு நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் தகர்ந்தது!

Updated: Mar 27

மிக அரிதான விபத்தினால்

அமெரிக்காவில் அதிர்ச்சி!!

துறைமுகம் துண்டிப்பு!


பாரிஸ், மார்ச் 26


அமெரிக்காவின் பிரபல பல்ரிமோர் நகரப் பாலம் மீது கொள்கலன் கப்பல் ஒன்று மோதியதில் அது தகர்ந்து வீழ்ந்துள்ளது. அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அனர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை

அதிகாலை 01.30 மணியளவில் (பாரிஸ் நேரம் காலை 06.30) இடம்பெற்றது.


அந்த சமயம் பாலத்தின் மேலாக வாகனங்கள் பயணித்துக் கொண்டிருந்தன. கப்பலில் இருந்து விடுக்கப்பட்ட ஆபத்து உதவிச் சமிக்ஞைகளை அடுத்து அதிகாரிகள் பாலத்தின் இரு புறங்களிலும் வாகனப் போக்குவரத்தை விரைந்து தடுத்து விட்டனர். அதனால் பெரும் உயிரிழப்புகளும் சேதங்களும் தவிர்க்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஒரு சில கார்களுடன் பயணிகள் சிலர் காணாமற்போயிருக்கின்றனர்.

நான்கு வழி போக்குவரத்துப் பாதைகள் கொண்ட- இரண்டு கிலோ மீற்றர்கள் நீளமான - "பிரான்ஸிஸ் ஸ்கொட் கீ" என்ற பெருந் தெருப் பாலமே கப்பல் மோதிய சில நிமிடங்களில் முழுவதுமாகத் தகர்ந்து நீரில் வீழ்ந்து போயிருக்கிறது. "Star-Spangled Banner" என்று தொடங்குகின்ற அமெரிக்கத் தேசிய கீதத்தின் வரிகளை வரைந்த பிரான்ஸிஸ் ஸ்கொட் கீ (Francis Scott Key Bridge) என்பவரது பெயரே இந்தப் பாலத்துக்குச் சூட்டப்பட்டிருக்கிறது . மேரிலான்ட் மாநிலத்தை ஊடறுத்துச்

செல்கின்ற படாப்ஸ்கோ நதியின் (Patapsco River) மேலாக நிறுவப்பட்ட

இந்தப் பாலம் அமெரிக்காவின் வடக்குத் தெற்கு இடையிலான கப்பல் போக்குவரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

நள்ளிரவு தாண்டி மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை

நகரின் மிக முக்கிய அடையாளமாகிய

இரும்புப் பாலம் கப்பல் மோதித் தகர்ந்து வீழ்ந்த காட்சி முதலில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.


இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் அல்ல என்பதை அமெரிக்கப் பாதுகாப்பு சேவைகள் உறுதிப்படுத்தும் வரை என்னவோ ஏதோ என்ற பதற்றம் நீடித்தது.


சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான 300 மீற்றர்கள் நீளமான

டாலி(Dali) என்ற கப்பலே சிறிலங்கா நோக்கிப் புறப்பட்ட வழியில் திடீரென இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்து பாலத்தின் பிரதான தூண் ஒன்றை மோதியது.


கப்பலில் ஏற்பட்ட எலெக்ட்ரிக் சீர்குலைவுகாரணமாகப் புரொப்புலர்கள் இயங்க மறுத்ததை அடுத்தே கப்பலைப் பாதுகாப்பதற்காகத் திடீரென நங்கூரம் இடப்பட்டது என்றும் அவ்வேளை அது நிலைகுலைந்து பாலத்துடன் மோதுண்டது என்றும் சிங்கப்பூர் துறைமுக அதிகார வட்டாரங்கள் கூறியுள்ளன.


கப்பல் அனர்த்தத்தை அடுத்து பல்ரிமோர் துறைமுகத்துடனான கப்பல் போக்குவரத்துத் தொடர்புகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல கோடி டொலர் பெறுமதியான இழப்பு ஏற்பட்டுள்ளது.


அதிபர் ஜோ பைடன் அனர்த்தம் நிகழ்ந்த பல்ரிமோர் நகருக்குச் செல்லவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். பாலம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும் எனினும் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக் கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த அனர்த்தத்தில் குறைந்தது ஆறு பேர் காணாமற்போயுள்ளனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

26-03-2024





0 comments

Comments


You can support my work

bottom of page