வீதிகளிலும் எல்லையிலும்
ஒழுங்கை நிலைநாட்டுவதே
முதல்பணி என்கிறார் அவர்
படம் : Bruno Retailleau
பாரிஸ், செப்ரெம்பர் 23
நாட்டில் சட்டம் ஒழுங்கை மீளவும் மிக இறுக்கமாக நிலைநிறுத்துவதே தனது முதல் பணியாக இருக்கும் என்று பிரான்ஸின் புதிய உள்துறை அமைச்சர்
புறுனோ ரெத்தாயோ (Bruno Retailleau) தெரிவித்திருக்கிறார்.
நமது வீதிகளிலும் எல்லைகளிலும் ஒழுங்கு பேணப்படவேண்டும் என்று பிரெஞ்சு மக்கள் விரும்புகிறார்கள். அதற்காக வாக்களித்திருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கைப் பேணுகின்ற பிரிவினர் மீது-பொலீஸார் மீது - உடல் ரீதியாகவேவோ அல்லது கடும் வார்த்தைகளினாலோ நடத்தப்படுகின்ற எத்தகைய தாக்குதல்களையும் நான் பொறுத்துக்கொள்ளப்போவதில்லை.
-இவ்வாறு அவர் உறுதிபடக் கூறியிருக்கிறார்.
பதவி விலகிச் செல்கின்ற உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னாவிடம் இருந்து பொறுப்புக்களைக் கையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே புருனோ ரெத்தாயோ
நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
பிரான்ஸில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் குடிவரவு உட்பட முக்கிய உள்நாட்டு விவகாரங்களைக் கையாள்கின்ற உள்நாட்டு அமைச்சுப் பொறுப்பு மூத்த வலதுசாரியும் ரிப்பப்ளிக்கன் கட்சி அரசியல்வாதியுமாகிய புறுனோ ரெத்தாயோவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
செனற் சபையில் ரிப்பப்ளிக்கன் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களது குழுவின் தலைவராக இருந்து வந்த
63 வயதான புறுனோ ரெத்தாயோ,
பாதுகாப்பு, குடிவரவு போன்ற விவகாரங்களில் கடும்போக்கான கொள்கை கொண்டவர். இதற்கு முன்னர் அதிபர் மக்ரோனின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது அரசிலேயே முக்கிய அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்
குடிவரவைக் குறைக்கவும் மற்றும் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட வன்முறைகளைத் தடுக்கவும் அவரது அமைச்சு புதிய திட்டங்களை அடுத்துவரும் வாரங்களில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில்
பிரதமர் மிசெல் பார்னியரது (Michel Barnier) அமைச்சரவையின் விவரங்கள் கடந்த சனியன்று வெளியாகியமை தெரிந்ததே. புதிய அமைச்சர்கள் தங்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
வலதுசாரிகளையும் மக்ரோனின் மையவாதிகளையும் அதிகமாகக் கொண்ட அமைச்சரவையாகப் புதிய அமைச்சரவை பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் அதிபர் மக்ரோன்
இன்றைய தினம் எலிஸே மாளிகைக்கு
அழைத்து அவர்களோடு முதலாவது கூட்டத்தை நடத்தியுள்ளார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
Comentarios