மிஷெல் பிளோங்கிற்கு
பிரெஞ்சுத் திரை உலகம்
உணர்வுபூர்வ அஞ்சலி....
பாரிஸ், ஒக்ரோபர் 5
பிரெஞ்சு சினிமாவின் பிரபல நடிகர்
மிஷெல் பிளோங் (Michel Blanc) தனது 72 ஆவது வயதில் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரை உலகம் மட்டுமன்றிச் சகல தரப்புகளில் இருந்தும் அஞ்சலிச் செய்திகள் குவிந்து வருகின்றன.
உள்ளுறுப்புகளின் மருத்துவப் பரிசோதனைக்காக நடத்தப்படுகின்ற கதிரியக்கப் படப்பிடிப்புக்களின்போது பயன்படுத்தப்படும் மருந்துப் பதார்த்தம் ஏற்படுத்திய மிக அரிதான - அதேசமயம் மோசமான-ஒவ்வாமையின் விளைவாக ஏற்பட்ட மாரடைப்பே அவரது உயிரைப்
பறித்துள்ளது என்ற தகவல் செய்தி ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.
எனினும் நடிகரது மரணத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பதைப் பாரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் இன்னமும் உறுதிசெய்யவில்லை.
நடிகர் பிளோங் கடந்த வியாழனன்று
பரிசோதனை ஒன்றுக்காக மருத்துவக் கதிரியக்கப் படம் எடுக்கும் நிலையம் (centre d’imagerie médical) ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனையின் போது ஏற்றப்பட்ட மருந்துப் பதார்த்தம்(contrast product) அவருக்குக் கடுமையான
ஒவ்வாமையை (serious allergic reaction) ஏற்படுத்தியுள்ளது. அதனால் அனாபிலாட்டிக் அதிர்ச்சி ஏற்பட்டு மாரடைப்பு மரணம் சம்பவித்துள்ளது என்று கூறப்படுகிறது.
மருந்துகளால் ஏற்படுகின்ற ஆபத்தான ஒவ்வாமையின் மிகக் கடுமையான பக்க விளைவே அனாபிலாக்டிக் அதிர்ச்சி (anaphylactic shock) எனப்படுகிறது. கதிரியக்கச் சோதனைகளின் போது உடல் உள்ளுறுப்புகளை அல்லது உள்ளே இருக்கக்கூடிய கட்டிகளை அல்லது காயங்களைத் தெளிவாகக் காட்சிப்படுத்துவதற்காக "கொன்ராஸ்ட்" எனப்படும் மருந்துப் பதார்த்தம் நரம்பு வழியாக ஊசி மூலம்
ஏற்றப்படுகிறது. கதிரியக்க மருத்துவ நிபுணர்களால் "சிரி ஸ்கான்"(CT scans) மற்றும் எம்ஆர்ஐ (MRIs,) அல்ராசவுண்ட் (ultrasound) பரிசோதனைகளுக்கு முன்பாக அது செலுத்தப்படுகிறது. இந்தப் பதார்த்தம் ஒவ்வாமை உள்ள நோயாளர்களில் உயிருக்கு ஆபத்தான பக்க விளைவை
ஏற்படுத்தக் கூடியது. ஆயினும் அது மிக மிக அரிதாகவே மரணங்களை ஏற்படுத்துகிறது. நடிகர் மிஷெல் பிளோங்கிற்கு இந்த மருந்தே அனாபிலாட்டிக் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக நம்பப்படுகிறது.
சகல விதமான கொன்ராஸ்ட்(contrast) மருந்துகளும் சிறிய அளவில் அல்லது சில சமயங்களில் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லன என்பதை மருத்துவ மற்றும் சுகாதாரப் பொருள்களது பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம்(National Agency for the Safety of Medicines and Health Products - ANSM)
ஏற்கனவே முன்னெச்சரிக்கை செய்திருக்கிறது. எனினும் உள்ளுறுப்புப் பரிசோதனைகளைத் திறம்படச் செய்வதில் இந்த மருந்து மிக அவசியமான பங்கைக் கொண்டுள்ளது.
மிஷெல் பிளோங் 16,ஏப்ரல் 1952 இல் Courbevoie என்ற இடத்தில் பிறந்தவர். 1974 முதல் படங்களில் நடிக்கத் தொடங்கியவர். பல தலைமுறைகளைக் கவர்ந்தவர். அவரது பாத்திரங்களும் அவற்றின் தடயங்களும் சாதாரண பிரெஞ்சு மக்களது வாழ்க்கையுடன் பயணிக்கின்ற துணைகளாகவே உணரப்பட்டுவந்தன. அவரது திடீர் மறைவு தேசிய அளவில் உணர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலிச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
"அவர் எங்களைச் சிரிக்க வைத்து அழவைத்தார். கண்ணீரை வரவைத்தார். பிரெஞ்சுச் சினிமாவின் ஓர் அடையாளச் சின்னமாக விளங்கிய நடிகர் போய்விட்டார்" என்று அதிபர் மக்ரோன் தனது சமூகவலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
05-10-2024
Comments