top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

கல்வி அமைச்சரின் பிள்ளைகள் தனியார் பள்ளியில்! சர்ச்சை!!

நியாயப்படுத்தி அவர்

வெளியிட்ட கருத்தால்

ஆசிரியர்கள் அதிருப்தி


பிரான்ஸின் புதிய கல்வி அமைச்சர் தனது பிள்ளைகள் தனியார் கல்லூரியில் கல்வி பெறுவதை நியாயப்படுத்தும் விதமாக வெளியிட்ட கருத்து நாட்டின் அரசுப் பாடசாலை ஆசிரியர் சமூகத்தின் கண்டனத்துக்கு இலக்காகியுள்ளது. எதிர்க் கட்சிகளும் அவரை விமர்சித்துக் கருத்து வெளியிட்டிருக்கின்றன.


கப்ரியேல் அட்டாலின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தேசிய கல்வி அமைச்சர் அமெலி ஊடேயா-காஸ்டெராவின் (Amélie Oudéa-Castéra) பிள்ளைகள் பாரிஸில்

உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கின்றனர்.


புதிய அமைச்சரது பெயர் கடந்த வியாழனன்று அறிவிக்கப்பட்ட கையோடு செய்தி நிறுவனம் ஒன்று இந்த விடயத்தை அம்பலப்படுத்தியதை அடுத்து அது தொடர்பாக எதிர்க் கட்சிகள் விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளன.


முக்கிய அரசியல் பிரமுகர்களது பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் கல்விபயில்வது வழக்கமான ஒன்றுதான். எனினும் நாட்டின் அரசுப் பாடசாலைகளிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர் தனது பிள்ளைகளைத் தனியார் பாடசாலையில் சேர்த்ததை நியாயப்படுத்தும் விதமாக வெளியிட்ட கருத்து அரசியல் மட்டங்களிலும் அரசுப் பள்ளிகளது ஆசிரியர் சங்கங்கள் மத்தியிலும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமெலி காஸ்டெராவின் பிள்ளைகள் பாரிஸ் ஆறாவது நிர்வாக வட்டாரத்தில் உள்ள ஸ்டானிஸ்லாஸ் நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளியில் (collège-lycée Stanislas à Paris) கல்விபயில்கின்றனர். அது சுமார் இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தோலிக்கப் பாடசாலை ஆகும் . சுமார் 3ஆயிரத்து 600 பிள்ளைகள் அங்கு கல்வி பயில்கின்றனர். நாட்டின் முன்னணித் தனியார் பாடசாலைகளில் அது முதலிடங்களில் உள்ளது.


கல்வி அமைச்சர் அமெலியும் புதிய பிரதமர் கப்ரியேல் அட்டாலும் வெள்ளிக்கிழமை Yvelines பகுதியில் உள்ள இடைநிலைப் பாடசாலை ஒன்றுக்கு வருகை தந்த சமயத்தில் அமைச்சர் தனது பிள்ளைகளது கல்வி விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். அப்போது தனது மூத்த புதல்வன் முதலில் பாரிஸில் உள்ள அரசுப் பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றதைச் சுட்டிக்காட்டி அவனது பெறுபேறுகளும்

அந்தப் பாடசாலையில் ஆசிரியர் வரவின்மையால் இழக்கப்பட்ட பாட நேரங்களும் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தன என்று குறிப்பிட்டிருந்தார்.


"பெரும்பாலான பெற்றோர்களைப் போன்றே நாங்களும் ஒரு கட்டத்தில் மாற்றுவழியைத் தேடும் விதமாகச் சோர்வடைந்தோம். நாங்கள் ஸ்டானிஸ்லாஸ் உயர்நிலைப் பள்ளி இருக்கின்ற அதே தெருவில் வசிக்கின்றோம். எனவே அங்கு எமது பிள்ளைகளைச் சேர்ப்பது எங்கள் உள்ளூர் வசதித் தெரிவாக இருந்தது. அங்கு கல்வி கற்க ஆரம்பித்த பின்னர்

பிள்ளைகள் நல்ல பெறுபேறுகள் மட்டுமன்றி மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறார்கள். நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறார்கள் "


-இவ்வாறு அமைச்சர் கூறியிருந்தார்.


இந்தக் கருத்தினால் ஆசிரியர் சமூகம் சினந்தெழுந்துள்ளது. அமைச்சர் அமெலி தனியார் பாடசாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சரா என்றவாறு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.


அரசுப் பாடசாலைகள் தொடர்பான தனது கருத்தினால் ஆசிரிய சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக அமைச்சர் பின்னர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.


எலிசபெத் போர்னின் அமைச்சரவையில் விளையாட்டுத் துறை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பொறுப்பான அமைச்சராக விளங்கிய அமெலி ஊடேயா-காஸ்டெராவிடம் தற்போது நாட்டின் தேசிய கல்வி அமைச்சுப் பொறுப்பும் அளிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

13-01-2024






0 comments

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

You can support my work

bottom of page