விமான நிலையத்தின்
பாதுகாப்புக்கு படைகள்
பாரிஸ், மே 16
நியூ கலிடோனியாவின்(Nouvelle-Calédonie) தலைநகர் நௌமியாவில் விமான நிலையம் மற்றும் கப்பல் துறைகளைப் பாதுகாப்பதற்காக பிரெஞ்சு இராணுவம் அனுப்பட்டிருக்கிறது. தீவுக் கூட்டங்களில் பிரபல ரிக்-ரொக் (TikTok) சமூக வலைத்தள ஊடகத்தை அரசு தடைசெய்திருக்கிறது.
பிரதமர் கப்ரியேல் அட்டால் நேற்றிரவு உள்துறை அமைச்சில் இடம்பெற்ற
அவசர கூட்டத்துக்குப் பின்னர் இத்தகவல்களை அறிவித்திருக்கிறார்.
பசுபிக்கில் அமைந்திருக்கின்ற பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகத் தீவாகிய நியூ கலிடோனியாவில்
கடந்த இரண்டு இரவுகளாக நீடித்த வன்செயல்களில் ஜொந்தாம் பொலீஸ் வீரர் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அதிபர் மக்ரோன் அங்கு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருப்பது தெரிந்ததே. அந்தச் சட்டம் பாரிஸ் நேரப்படி நேற்றிரவு எட்டு மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சட்டம் ஒழுங்கை மீறுவோர் மற்றும் குழப்பம் விளைவிப்போரை
அவசரகாலச் சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கும் உத்தரவுகளை உள்துறை அமைச்சு விடுத்துள்ளது.
🔴எதற்காக அங்கு வன்செயல்?
நியூ கலிடோனியா தீவுக் கூட்டங்களில்
தற்காலிகமாகக் குடியேறியவர்கள் அங்கு நடைபெறுகின்ற மாகாணத் தேர்தல்களில் வாக்களிப்பதை அனுமதிக்கும் வகையிலான அரசமைப்புச் சட்டத் திருத்தம் பாரிஸில் நிறைவேற்றப்பட்டிருப்பதன் எதிரொலியாகவே அங்கு கலவரங்கள் வெடித்துள்ளன.
நியூ கலிடோனியாவில் பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் வசிக்கின்ற பிரெஞ்சுக் குடிமக்கள் அங்கு நடைபெறும் மாகாணத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குகின்ற சட்டத் திருத்தம் பிரான்ஸின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது ஜனநாயக ரீதியாக நியாயமானது என்று அதனை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் இந்தச் சட்டத் திருத்தம் தீவின் உள்ளூர்வாசிகளைச் சீற்றமடையச் செய்துள்ளது. நியூ கலிடோனியாவின் பழங்குடிகளான கனாக்(Kanak) இன மக்களை ஓரங்கட்டி அவர்களது வாக்களிப்பு வீதத்தைக் குறைத்துவிடும் என்பது சட்டத்தை எதிர்ப்போரது வாதமாக உள்ளது.
கலிடோனிய மக்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிரானிஸிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திரத் தனிநாடாக வாழ்வதற்கு ஆசைப்படுகிறார்களா என்பதை அறிவதற்காக அங்கு மூன்று முறை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. மூன்று வாக்கெடுப்புகளிலும் அவர்கள் பிரிந்து செல்வதை நிராகரித்திருந்தனர். மூன்றாவது வாக்கெடுப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாப் பெருந் தொற்று நோய்க் காலப்பகுதியில் நடைபெற்றிருந்தது.
தொற்றுநோய்க் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த வாக்கெடுப்பு முழுமை பெறவில்லை என்று பிரிந்து செல்வதை ஆதரிக்கின்ற தரப்பினர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்திருந்தனர்.
கலிடோனியாவின் பிரிவினையை ஆதரிப்போரே தற்சமயம் அங்கு நடைபெறுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்செயல்களின் பின்னணியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
16-05-2024
Comments