top of page
Post: Blog2_Post

செங்கடலின் அடியில் சர்வதேச இன்ரநெற் கேபிள்கள் சேதம்?

அமெரிக்கா - பிரிட்டன் மீது

ஹூதிக்கள் குற்றச்சாட்டு


நவீன உலகில் போரை நிறுத்துவதற்கு அணு குண்டுகள் அவசியம் இல்லை.

உலகை இணைத்து இயக்கும் கடலடி இணையக் கேபிள் வலைப்பின்னலை

(underwater Internet cables network) அறுத்துவிட்டாலே போதும்.


விமானங்கள் பறக்காது,, மொபைல் போன்கள் இயங்காது.. வங்கிகளின் எலெக்ரோனிக் பணப்பரிமாற்றங்கள்

நின்றுவிடும்... இப்படி இன்னமும் பல நினைத்துப் பார்த்திராத ஸ்தம்பித நிகழ்வுகளை உலகம் சந்திக்கும்.


இராணுவமயமாகி வருகின்ற செங்கடலில் யேமன் நாட்டுக் கரையை அண்டி ஆழ்கடல் ஊடாகச் செல்கின்ற இது போன்ற இன்ரநெற் கேபிள்களில் சிலவற்றில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.


🔴கிழக்கு ஆசியாவை எகிப்து ஊடாக ஐரோப்பாவுடனும் சீனாவை பாகிஸ்தான், கட்டார் போன்ற நாடுகள் வழியாக மேற்குலகுடனும் இணைக்கின்ற ஏஏஈ1 கேபிள்(AAE-1 cable) -


🔴தெற்கு ஐரோப்பாவை எகிப்து, சவுதி அரேபியா, ஜிபூதி, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா ஆகியவற்றுடன் இணைக்கின்ற ஈரோப் இந்தியா ஹேற்வே(Europe India Gateway - EIG) -


🔴ஐரோப்பா, ஆபிரிக்கா, இந்தியாவை இணைக்கின்ற சீகொம் கேபிள் (Seacom cable) - இதனை சீகொம் நிறுவனமும் இந்தியாவின் டாடா கொம்யூனிகேஷன் (Tata Communications) நிறுவனமும் கூட்டாக இயக்குகின்றன -


-ஆகிய மிக முக்கிய கேபிள்களிலேயே சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக டேற்றா சென்ரர் டைனமிக்ஸ் (Data Center Dynamics) என்ற சர்வதேச ஆழ்கடல் இணையத் தரவுக் கேபிள் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் அதற்கு என்ன காரணம் என்பதை அது உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம்

குறைந்தது ஒரு கேபிள் சேதமடைந்திருப்பதை சீகொம் நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால் அதற்குப் "பயங்கரவாதம்" காரணமா என்பதை அது உறுதிசெய்யவில்லை.

இதற்கிடையில் யேமனியில் நிழல் அரசு ஒன்றை நடத்துகின்ற ஹூதி தீவிரவாதிகளது போக்குவரத்து அமைச்சு ஹூதிக்களது சபா செய்தி நிறுவனம் ஊடாக (Saba news agency) வெளியிட்டிருக்கின்ற தகவலில்-


செங்கடலில் அமெரிக்க-பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களது நடவடிக்கைகள் காரணமாகவே

கடலடிக் கேபிள் இணைப்புகளில் சீர்குலைவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் ஆரம்பித்தது முதல் இந்தக் கடற் பிரதேசம் பதற்றம் நிறைந்த புதிய போர்

முனையாக மாறி வருவது வாசகர்கள் அறிந்ததே. இந்த நிலையில் -


ஐரோப்பா - ஆசியா - இந்தியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கின்ற இணையத் தரவுக் கேபிள்கள் பலவும் ஈரான் ஆதரவு பெற்ற ஹுதி தீவிரவாதிகளது ஆதிக்கம் நிறைந்த

செங்கடலின் அடியில் செல்கின்றன.

காஸா மீதான போரை நிறுத்துமாறு

கேட்டுக் கப்பல்களைத் தாக்கி வருகின்ற தீவிரவாதிகள், அதே நோக்கித்துக்காக இன்ரநெற் கேபிள்களையும் துண்டிக்கக் கூடும்

என்ற அச்சம் மேற்குலகிடம் உள்ளது. இதுபற்றிய எச்சரிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே

குறைந்தது மூன்று கடலடிக் கேபிள்களில் சேதங்கள் ஏற்பட்டிருப்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.


தொடர்புடைய செய்தி இணைப்பு


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

03-03-2024

0 comments

Comments


You can support my work

bottom of page