top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

செங்கடல் "போர்" தீவிரமடைகிறது மூன்று படகுகள் தாக்கி மூழ்கடிப்பு!

சுயஸ் கால்வாயை தவிர்த்து

நன்னம்பிக்கை முனை வழி

கப்பல்கள் நெடும் பயணம்


🔴பொருள்கள் விலையேறும்


செங்கடலில் ஹூதிக்களின் மூன்று தாக்குதல் படக்குகளை அமெரிக்கக் கடற்படை மூழ்கடித்திருப்பதாகப் பென்ரகன் அறிவித்திருக்கிறது.


டென்மார்க் நாட்டின் பிரபல மெர்க்ஸ் (Maersk) சரக்குக் கப்பல் (merchant vessel) நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்றைத் தாக்கிக் கடத்தும் நோக்குடன் அதனை நெருங்கி வந்த படகுகள் மூன்றையே கடற்படையின்

ஹெலிகள் தாக்கி அழித்துள்ளன என்று அமெரிக்கப்படைகளது மத்திய கட்டளைப் பீடம் (US Central Command - CENTCOM) இன்று ஞாயிற்றுக்கிழமை

அறிவித்திருக்கிறது.

மெர்க்ஸ் (Maersk) நிறுவனத்தின் ஹாங்சோ (Hangzhou) என்ற கப்பலைக் கடத்தும் நோக்குடன் வந்த ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி தீவிரவாதிகளது நான்கு படகுகளில் மூன்றையே தாக்கி அழித்துவிட்டதாக அமெரிக்கா கூறுகிறது. இந்தக் கப்பல் சிங்கப்பூரில் இருந்து எகிப்து நோக்கிச் சென்றுகொண்டிருந்த சமயத்திலேயே செங்கடலில் - மிக முக்கிய கடற் பாதையில்- தீவிரவாதிகளது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.


உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல் போக்குவரத்து நிறுவனமாகிய மெர்க்ஸ் (Maersk) இந்தச் சம்பவத்தை அடுத்து செங்கடல் ஊடான தனது கப்பல்ப் போக்குவரத்துகள் அனைத்தையும் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.


ஹூதி தீவிரவாதிகளது அச்சுறுத்தலில் இருந்து வெளிநாட்டுக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக செங்கடலில் அமெரிக்கா தலைமையில் பன்னாட்டுப் போர்க் கப்பல்களது கூட்டு ரோந்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இந்தத் தாக்குதல் முயற்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு வெளியிட்டுவருகின்ற - ஈரானிய

உதவி பெற்ற - யேமனியத் தீவிரவாத அமைப்பான ஹூதி(Houthi) இயக்கம் செங்கடல் வழியே செல்கின்ற - இஸ்ரேலுடன் தொடர்புடைய - கப்பல்கள் மீது கடந்த சில வாரங்களாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உலகின்மிக முக்கிய கடல்பாதையைக் கடந்து செல்கின்ற சர்வதேச சரக்குக் கப்பல்களது பயணங்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு இலக்காகிவருகின்றன. அதனால் கப்பல் நிறுவனங்கள் பலவும் செங்கடல் வழிப் பயணங்களை நிறுத்திவிட்டு வேறு மார்க்கங்களில் செல்லத் தொடங்கியுள்ளன. சில நிறுவனங்கள் செங்கடல் ஊடான பயணக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளன.


ஆசியாவை ஜரோப்பாவுடன் இணைக்கின்ற முக்கிய கடல்வழிப் பாதை செங்கடலில் அமைந்துள்ளது.

யேமன் நாட்டுக்கு அருகே ஹூதி தீவிரவாதிகளது கட்டுப்பாட்டில் இருக்கின்ற பாப் அல்-மண்டப் ஜலசந்தியைக் (Bab al-Mandab Strait)

கடந்தே கப்பல்கள் செங்கடலுக்குள் நுழைய வேண்டும். சர்வதேச கப்பல்கள்

மத்தியதரைக் கடலை இணைக்கின்ற எகிப்தின் சுயஸ் கால்வாயை (Suez Canal) அடைவதற்குச் செங்கடலைக் கடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.


ஹூதி ஆயுத பாணிகள் கேந்திர முக்கியத்துவம் மிக்க இந்த பாப் அல்-மண்டப் ஜலசந்தியில் (Bab al-Mandab Strait) வைத்தே வெளிநாட்டுக் கப்பல்களைத் தாக்கியும் கடத்தியும் வருகின்றனர். இதனால் ஆசியாவில் இருந்து செல்லும் கப்பல்கள் ஐரோப்பாவைச் சென்றடைவதற்காக சுயஸ் கால்வாயைத் தவிர்த்துவிட்டு

நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியே ஆப்பிரிக்காவைச் சுற்றி நீண்ட பயணம் செய்தே ஐரோப்பாவை சேரவேண்டியுள்ளது. இதனால் கப்பல் கொள்கலன் கட்டணங்களும் இதர செலவுகளும் அதிகரித்துள்ளன.


இந்த நெருக்கடியானது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தி உலக சந்தையில் எரிபொருள்கள், எரிவாயு உட்படப் பல அத்தியாவசியப் பொருள்களது விலைகளில் அதிகரிப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள் :


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

31-12-2023







0 comments

Comentarios


You can support my work

bottom of page