top of page
Post: Blog2_Post

செங்கடலில் தாக்கப்பட்ட பிரிட்டிஷ் கப்பல் மூழ்குகிறது

அமோனியம் கடலில்

கலப்பதால் பேரழிவு


பாரிஸ்,மார்ச் 2


செங்கடலில் தாக்குதலுக்கு இலக்காகிய இங்கிலாந்து நாட்டின் சரக்குக் கப்பல் ஒன்று கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.


இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட றூபிமார் (Rubymar) என்ற அந்தக் கப்பல் லெபனான் நிறுவனம் ஒன்றினால் இயக்கப்பட்டு வந்தது.

அது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அமோனியம் உர வகைகளை (ammonium nitrate fertiliser) ஏற்றிக் கொண்டு பல்கேரியா நாட்டின் வர்னா (Varna) துறைமுக நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்த வழியில் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.


செங்கடலில் ஏடன் வளைகுடாவுக்கு அருகே கப்பல் சென்றுகொண்டிருந்த சமயத்திலேயே யேமனியின் ஹுதி தீவிரவாதிகள் அதனைத் தாக்கினர். இரண்டு ஏவுகணைகள் கப்பலைத் தாக்கியுள்ளன என்று கூறப்படுகிறது.


தாக்கப்பட்ட கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தனர். கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்படத் தொடங்கிய நிலையிலேயே அது கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கப்பலில் உள்ள அமோனியம் கடலில் கலப்பதால் அப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்களுக்கும் சூழலுக்கும் பேரழிவு ஏற்படும் என்று சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


செங்கடல் ஊடாகப் பயணிக்கின்ற வழியில் கடந்த ஓரிரு மாதகாலப்பகுதியில் தாக்கப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கப்பல்களில் இதுவும் ஒன்றாகும்.


காஸா மீது இஸ்ரேல் தனது போரை நிறுத்தும் வரை செங்கடலில் தமது தாக்குதல்கள் நிற்காது என்ற செய்தியை யேமனியின் ஹுதி

தீவிரவாதிகள் மீண்டும் மீண்டும் உலகுக்கு அறிவித்துவருகின்றனர்.


யேமனியில் உள்ள ஹுதிக்களது நிலைகள் மீது அமெரிக்கா தலைமையில் கடந்த ஒருமாத காலமாக வான் தாக்குதல்கள்

நடத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் ஹுதிக்களது தாக்கும் திறன் குறையவில்லை.


செங்கடல் உலகின் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தில் ஒரு கேந்திரக் கடற்பகுதி ஆகும். எகிப்தின் சுயேஸ் கால்வயைக் கடந்து செல்கின்ற கப்பல்கள் அனைத்தும் செங்கடல் ஊடாகவே பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஹுதி தீவிரவாதிகளது அச்சுறுத்தல் காரணமாக உலகின் பிரபல சரக்குக் கப்பல் கம்பனிகள் தமது கப்பல் போக்குவரத்துகளை இடைநிறுத்தி உள்ளன.


தொடர்புடைய செய்திகள் :




 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

02-03-2024




0 comments

Comments


You can support my work

bottom of page