top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

சிசுவின் பெற்றோர் அம்ஸ்ரடாமில் கைது பொலீஸ் பின்தொடர உதவிய"சிம்" அட்டை!

பிரான்ஸ் திரும்ப

இருவரும் மறுப்பு

விவரங்கள் :தாஸ்நியூஸ். கொம்


பாரிஸ், ஒக்ரோபர் 27


பிறந்து 17 நாள்களேயான குழந்தை ஒன்றுடன் பாரிஸ் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற இளம் பெற்றோர்கள் நெதர்லாந்தின் தலைநகராகிய அம்ஸ்ரடாமில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். குழந்தை ஆரோக்கியமான நிலையில் மீட்கப்பட்டுப் பராமரிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.


25 மற்றும் 23 வயதுடையவர்களான கெவின் மற்றும் கிரிஸ்ரினா என்ற அந்த இளம் பெற்றோர்கள் இருவரும்

தங்களை அங்கிருந்து பிரான்ஸுக்குத் திருப்பி அனுப்புவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஐரோப்பியப் பிடியாணையின் கீழ் தேடிப் பிடிக்கப்பட்ட இருவரையும் எப்படியும் பிரான்ஸிடம் ஒப்படைக்கவேண்டிய கட்டாய கடப்பாடு நெதர்லாந்து நாட்டுக்கு உள்ளது.

குற்றச் செயலுக்காக ஒரு நாட்டில் தேடப்பட்டவர்கள் பிறிதொரு நாட்டின் மண்ணில் கைதானாலும் ஐரோப்பியப் பிடியாணை உடன்பாட்டில் ஒப்பமிட்ட நாடு ஒன்று அவர்களை உரிய நாட்டிடம் திருப்பி ஒப்படைத்தே ஆகவேண்டும் என்பது விதி ஆகும். அந்த வகையில் கைதான பெற்றோரை ஒப்படைக்குமாறு நெதர்லாந்திடம் கோரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் பிரான்ஸுக்கு இல்லை. ஆனால் -


நெதர்லாந்து அரசு அவர்களைத் திருப்பி ஒப்படைப்பதற்கு முன்பாக இரண்டு நடைமுறைகளைப் பினபற்ற வேண்டி இருக்கும். அதில் ஒன்று அவர்களது விருப்பத்தைக் கோருவது ஆகும். இருவரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதால் காரணத்தைத் தெளிவுபடுத்தி மனுச் செய்வதற்கு அவர்களுக்கு அவகாசம் தரப்படலாம்.

அதனால் அவர்களைத் திருப்பி ஒப்படைப்பதற்குச் சில வார காலம் எடுக்கலாம்.


பொலீஸ் வலையில்

சிக்கியது எப்படி....?


பாரிஸ் உல்னே-சூ-புவாவில் இருந்து

காரில் புறப்பட்டு பெல்ஜியம் வழியாக அம்ஸ்ரடாம் சென்றடைந்த பெற்றோர் மூன்று நாடுகளின் பொலீஸ் வலையில் சிக்கியது எப்படி என்ற விவரங்களை விசாரணையாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.


குறைமாத சிசுவுடன் அவர்கள் பயணித்த கார் முதலில் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அந்தக் காரைச் சோதனையிட்ட பொலீஸார் அதிலிருந்து ஒரேயொரு தடயத்தை மட்டுமே மீட்க முடிந்தது. அது ஒரு லைக்கா மொபைல்(Lyca Mobile) தொலைபேசி சேவையின் சிம் கார்ட் அட்டை(SIM card holder) அதுவே தப்பிச் சென்றவர்களைப் பின்தொடரப் பொலீஸாருக்குக் கைகொடுத்தது என்ற தகவலை பெல்ஜியம் அரச வழக்கறிஞர் வெளியிட்டுள்ளார்.


மிகக் குறுகிய நேரத்துக்குள் சிம் கார்ட் அட்டை மூலம் அதன் தொலைபேசி இலக்கம் கிடைத்தது. அந்த இலக்கத்தை உடைய தொலைபேசிப் பாவனையாளர் நெதர்லாந்துக்குள் பிரவேசித்திருப்பதை அந்த நாட்டின் "ரோமிங் சிஸ்டம்" ("roaming") உறுதிப்படுத்தியது. உடனடியாகவே அந்தத் தொலைபேசிப் பாவனையாளரது நடமாட்டங்களை நெதர்லாந்துப் பொலீஸார் கண்காணிக்கத் தொடங்கினர். அதன்படி கடந்த வெள்ளியன்று அம்ஸ்ரடாம் அருகே உள்ள Neutraal என்ற ஹொட்டேலில் பெற்றோரையும்

குழந்தையையும் கண்டுபிடித்தனர்.


⚫முதலில் வெளியான விவரமான செய்தியின் இணைப்புக் கீழே :https://www.thasnews.com/post/ஆஸ-பத-த-ர-ய-ல-பர-மர-ப-ப-ல-ர-ந-த-17-ந-ள-ச-ச-வ-டன-தப-ப-ய-ப-ற-ற-ர-ப-ல-ஸ-ர-த-ட-தல

 

தாஸ்நியூஸ் - பாரிஸ் ThasNews - Paris

27-10-2024





0 comments

Comments


You can support my work

bottom of page