இந்தமுறை நிகழ்வுகள்
அவென்யூ ஃபொஷ் இல்
மூடப்படும் மெற்றோக்கள்
பாரிஸ், ஜூலை, 12
பாரிஸில் ஜூலை 14 சுதந்திர நாள் இராணுவ அணிவகுப்புகள் இந்த முறை இடம்மாற்றப்பட்டுள்ளன.
அணிவகுப்பு மற்றும் நிகழ்வுகள் வழக்கமாக நடைபெறுகின்ற சாம்ஸ் எலிசீஸில் இடம்பெறமாட்டாது. அங்கு ஒலிம்பிக் போட்டிகளுக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் காரணமாக சகல நிகழ்வுகளும் பாரிஸ் 16 நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள அவென்யூ ஃபொஷ்(Avenue Foch) என்ற நீண்ட தெருவுக்கு மாற்றப்பட்டுள்ளன.
சாம்ஸ் எலிசீஸில்(Champs-Élysées) பாரம்பரியமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகின்ற சுதந்திர தின நிகழ்வுகள் இவ்வாறு அங்கிருந்து இடமாற்றப்படுவது வரலாற்றில் இது இரண்டாவது முறை ஆகும்.
படம் :அணிவகுப்பு ஒத்திகையில் வீரர்கள்..
இம்முறை சுதந்திர நாள் நிகழ்வுகளின் தொனிப் பொருள் பெருமைக்குரிய ஒலிம்பிக் போட்டிகள், மற்றும் பிரான்ஸை விடுதலைசெய்த நோர்மன்டித் தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு ஆகிய முக்கிய நிகழ்வுகளைக் கௌரவப்படுத்தும் விதமாக அமையவுள்ளது.
பிரான்ஸின் விடுதலையில் பங்கேற்ற
ஜரோப்பிய, ஆபிரிக்க நாடுகளது பிரதிநிதிகள் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கின்றனர். சுமார் நாலாயிரம் படை வீரர்களும் பொலீஸ், ஜொந்தாம் வீரர்களும் அணிவகுப்புகளில் பங்கேற்கின்றனர்.
அணிவகுப்பு நடைபெறும் வீதியின் தன்மை கருதி இம்முறை டாங்கிகள் மற்றும் படை வாகனங்கள் என்பன குறைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் இம்முறை அணிவகுப்புகளில் சிறப்பு அம்சமாக ஒலிம்பிக் தீபத்தைக் குதிரைப் படைப் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் சுமந்து வரவுள்ளனர்.
சுதந்திர நாள் நிகழ்வுகள் மற்றும் ஒலிம்பிக் தீப்பந்தப் பவனி என்பன ஒரேசமயத்தில் நடைபெறுவதால் தலைநகர் எங்கும் பொலீஸ் காவல்க் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
சுதந்திர நாளான ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் நகரில் மெற்றோ ரயில் நிலையங்கள் சில பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் மூடப்படவுள்ளன. நகரின் மையத்தில் முக்கிய சில வீதிகளில் வாகனங்களைத் தரிக்க விடுவதும் தடுக்கப்படவுள்ளது.
RER ரயில் நிலையங்களில் ஒன்றாகிய la gare Avenue Foch மூடப்பட்டிருக்கிறது.
மெற்றோ வழித்தடம் 2இல் (ligne 2) Porte Dauphine மற்றும் Charles de Gaulle – Étoile ஆகிய நிலையங்களுக்கு இடையே ரயில் சேவைகள் தடைப்படலாம். அதேபோன்று வழித்தடம் ஒன்றில் (ligne 1) Hôtel de Ville மற்றும் Champs-Élysées – Clemenceau நிலையங்கள் மூடப்படும்.
வழித்தடம் 6 இல் (ligne 6)
Montparnasse Bienvenue மற்றும் Charles de Gaulle – Étoile இடையே சேவைகளில் தடங்கல்கள் ஏற்படும். Boissière
Alma – Marceau, Iéna மற்றும் Trocadéro La Motte-Picquet – Grenelle, École Militaire
ஆகிய நிலையங்கள் மூடப்படும்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
1-07-24
Comments