top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

செப்ரெம்பர் 14 - தேசிய விளையாட்டு தினமாக மக்ரோன் அறிவிப்பார்

ஒலிம்பிக் சம்பியன்களை

கௌரவிக்கும் அணிவகுப்பு பாரிஸில் இன்று நடக்கிறது


-—தாஸ்நியூஸ் செய்திச் சேவை


பாரிஸ், செப்ரெம்பர், 14


பிரான்ஸில் ஆண்டு தோறும் செப்ரெம்பர் 14 ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக(Fête nationale du Sport) அறிவிக்கப்படவுள்ளது.


ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த சம்பியன்கள், பதக்கங்களை வென்றெடுத்த பிரெஞ்சு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வகையிலான மாபெரும் அணிவகுப்பு இன்று சனிக்கிழமை பாரிஸ் நகரின் மத்தியில் சாம்ஸ் எலிசேயில் நடைபெறவிருக்கிறது.


சம்பியன்களைக் கொண்டாடும் இந்தப் பெருவிழாவை ஒட்டி அந்தப் பகுதி மீண்டும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பெரும் இசை நிகழ்ச்சிகளும் அங்கு ஏற்பாடாகியுள்ளன. நாட்டின் வீரர்களைக் கொண்டாடும் இன்றைய நாளையே ஆண்டு தோறும் தேசிய விளையாட்டு தினமாகத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு அரசுத் தலைவர் மக்ரோன் விரும்புகிறார்.

"இந்த நாளில் தெருக்களிலும், பள்ளிகளிலும், விளையாட்டு வளாகங்களிலும் நடைபெறும் பிரபலமான விளையாட்டு விழாக்களில் நாம் ஒன்றுபட வேண்டும்"


"நமது நகரங்களில், நமது கிராமங்களில், நமது சுற்றுப்புறங்களில். எல்லா இடங்களிலும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுடன் இணைந்து நாம் அனைவரும் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்"


-இவ்வாறு மக்ரோன் செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.


ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் ஒரு நாள் முழுவதும் இசைத் திருவிழாவைக் (la Fête de la Musique) கொண்டாடுவது போன்றே தேசிய ரீதியில் விளையாட்டுக்களைக் கொண்டாடுவதற்கு ஒரு நாளை ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் மாதம் பாடசாலைகள் தொடங்கும் சமயத்தில் விளையாட்டுப் பயிற்சிகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் குறிக்கும் விதமாக இந்த நாள் அமையும். அன்றையநாளில் வளர்ந்தவர்கள், இளையோர் அனைவரும் இணைந்து மைதானங்களிலும் பொது இடங்களிலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தமுடியும்.


🔵சம்பியன்களின் அணிவகுப்பு

பாரிஸில் ஒலிம்பிக் சம்பியன்களின்

அணிவகுப்பு இன்று மாலை 1600மணியளவில் ஆரம்பமாகும்.

70 ஆயிரம் பார்வையாளர்களும் சுமார் முந்நூறு விளையாட்டு வீரர்களும் அதில் கலந்துகொள்கின்றனர். 4ஆயிரம் பொலீஸார் மற்றும் ஜொந்தாம் படை வீரர்கள் பாதுகாப்பு

வழங்கவுள்ளனர். விசேட அரங்குகளில் இரவு 23.00 மணிவரை நடைபெறவுள்ள

இன்னிசை நிகழ்ச்சிகளில் பிரபல கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

14-09-2024


0 comments

Bình luận


You can support my work

bottom of page