top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

சிறைச்சாலை வாகன அணி மீது அதிரடித் தாக்குதல்! கைதியை மீட்ட ஆயுதபாணிகள் தப்பியோட்டம்!

காவலர்கள் இருவர் பலி!

பெரும் தேடுதல் வேட்டை


பாரிஸ், மே 14


முக்கிய கைதி ஒருவரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சிறைச்சாலை வாகனம் மீது ஆயுதபாணிகள் திடீர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிறைக் காவலர்கள் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்தியோர் கைதியை

மீட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


பிரான்ஸின் வடக்கில் நோர்மன்டி பிராந்தியத்தில் EURE என்ற இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் 11மணியளவில் இந்தத் துணிகரத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.


சிறைச்சாலை வாகன அணி A154 நெடுஞ்சாலையில் இங்காவீல் (Incarville) என்ற இடத்தில் உள்ள வீதி நுழைவுக் கட்டணம் செலுத்துகின்ற கடவையில் (Péage) தரித்து நின்ற சமயத்திலேயே கறுப்பு நிற வாகனம் ஒன்றில் முகத்தை மூடி மறைத்தவாறு துப்பாக்கிகளுடன் வந்த நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். தப்பிச் சென்றுள்ள 30 வயதான கைதி போதைப் பொருள் கடத்தல்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்று தெரிவிக்கப்படுகிறது. "ஃபிளை" என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற முகமட் அம்ரா (Mohamed Amra) என்ற

அந்தக் கைதி பாரிஸ், மார்செய் நகரச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்.

படம் :தாக்குதல் நடைபெற்ற Incarville

வீதிக்கட்டணக் கடவைப் பகுதி

 

கைதியையும் தாக்குதலாளிகளையும் தேடிப் பிடிப்பதற்காக ஜொந்தாம்

படையினரின் Épervier plan அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் இருநூறு வீரர்கள் தேடுதல் நடத்திவருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி வான்வழியாகக்

கண்காணிக்கப்பட்டுவருகிறது. பொலீஸ் ஹெலிக்கொப்ரர்கள் அந்தப் பகுதியை நோட்டமிட்டு வருகின்றன. A154 வீதியில் இரு திசைகளிலும் வாகனப் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.


தாக்குதல் நடந்த சமயத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் பதிவுசெய்த வீடியோ காட்சிகள் சமூக இணைய வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. தாக்குதலாளிகள் நீண்ட இயந்திரத் துப்பாக்கிகளுடன் தோன்றுகின்றனர். குறைந்தது இரண்டு வாகனங்களில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவற்றில் ஒன்று பின்னர் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இரண்டு சிறைச்சாலைக் காவலர்கள் கடமையின் போது கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சி உணர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


இந்தத் தாக்குதல் "அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது" என்று தனது பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் அதிபர் மக்ரோன்.

உயிரிழந்த காவலர்களது குடும்பங்களுக்கு அவர் அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

14-05-2024





0 comments

Comments


You can support my work

bottom of page