செய்தி:தாஸ்நியூஸ் - பாரிஸ்
பாரிஸ், நவம்பர் 15
சிறிலங்காவில் நடந்த இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. கடந்த செப்ரெம்பரில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இடதுசாரித் தலைவர் அனுர குமார திஸநாயக்காவின் தேசிய மக்கள் சக்திக்கட்சி நாடளாவிய ரீதியில் அள்ளுகொள்ளாக வாக்குகளைப் பெற்று நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான வெற்றியைப் பதிவுசெய்கின்ற நிலையில் உள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணத் தொகுதியிலும் அனுர குமாரவின் தேசிய மக்கள் சக்திக் கட்சி வென்றிருக்கிறது. சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில்
யாழ்ப்பாணத் தொகுதியைத் தமிழர் அல்லாத கட்சி ஒன்று கைப்பற்றுவது இதுவே முதல்தடவை. இது பாரம்பரிய தமிழ்க்கட்சிகளுக்குக் கிடைத்த பெரும் பின்னடைவாகக் கொள்ளப்படுகிறது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நல்லூர் தொகுதியிலும் தேசிய மக்கள் சக்தி கட்சி முதலிடம் பெற்றிருக்கிறது.
வடக்கு - கிழக்குத் தேர்தல் தொகுதிகள் பலவற்றிலும் தேசிய மக்கள் சக்தி முதனிலையில் இருப்பதை முற்கொண்டு வெளியான முடிவுகள் காட்டுகின்றன. சிறிலங்காவின் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை வரை வெளியான மதிப்பீடுகள் அனுர குமாரவின் கட்சி தேசிய ரீதியில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறது. அது எழுபது சதவீதமான வாக்குகளைத் தாண்டும் நிலையில் வெற்றிநடை போடுகிறது.
ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் தலைவிரித்திருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பொருளாதார நெருக்கடியால் தள்ளாடிய நாட்டில், அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்துப் பதவிக்கு வந்தவர் அனுர குமார.
நாட்டின் பாரம்பரியக் கட்சிகள் மீதான மக்களின் சீற்றம் மிக உச்சமாக இருந்த ஒரு கட்டத்தில், பாரம்பரியக் கட்சிகளைப் புறந்தள்ளி அதிரடியாக அரசியல் அரங்கில் நுழைந்த அவர், தனது கொள்கைகளையும் திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு அவசியமான பெரும்பான்மையை எதிர்பார்த்து நாடாளுமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தார்.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் 18 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து - ஒரு சாதனை அளவாக - மொத்தம் 690 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் குதித்திருந்தன.
இந்த முறை தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டவர்களில் பெரும்பாலானோர் அரசியலில் புது முகங்கள் ஆவர். அந்தக் கட்சிக்கு அமோக வாக்குகள் கிடைத்திருப்பதை அடுத்து நாடாளுமன்றத்தைப் புதிய முகங்கள் நிறைக்கவுள்ளன.
பிந்திய செய்திகள் வரவிருக்கின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
15-11-2024
Коментари