வெற்றி அறிவித்த கையோடு
இந்தியத் தூதர் சந்தித்தார்
".. அன்புக்குரிய குழந்தையை
அநுரவிடம் ஒப்படைக்கிறேன்.."
ரணில் பிரியாவிடைச் செய்தி
தாஸ்நியூஸ் - செய்திச் சேவை
படம் :புதுடில்லியின் வாழ்த்துச் செய்தியோடு அநுர குமாரவைச் சந்தித்த தூதர் சந்தோஷ் ஜா..
பாரிஸ், செப்ரெம்பர் 23
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேசிய மக்கள் சக்தித்
தலைவர் அநுர குமார திஸநாயக்கா
தெரிவுசெய்யபபட்டிருக்கிறார். அவர் பெரும்பாலும் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என்று அறிவிக்கப்படுகிறது.
55 வயதான அநுர குமாரவின் வெற்றி அறிவிக்கப்பட்டு அவர் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவாகிய கையோடு கொழும்புக்கான இந்தியத் தூதர் சந்தோஷ ஜா (Santos Jha) கொழும்பு பத்தரமுல்லவில் உள்ள தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைமையகத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
சிறிலங்காவில் விரிவடைந்து வருகின்ற இந்தியாவின் அதானி குழுமத்தின் தொழில் துறை ஆக்கிரமிப்பு உட்பட புதுடில்லியின் செல்வாக்குகளைப் புதிய ஜனாதிபதி எவ்வாறு அணுகுவார் என்ற பெரும் கேள்வி இரண்டு நாடுகளினதும்
ராஜதந்திர மட்டங்களில் எழுந்துள்ள
நிலையில் தூதர் ஜா அநுர குமாரவைச்
சந்தித்து இந்திய அரசுத் தலைமையின் வாழ்த்துச் செய்தியை அவரிடம் நேரில் கையளித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சனியன்று நடைபெற்ற வாக்களிப்பில்
வேட்பாளர்களில் எவரும் 50 சத வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறியதால் தேர்தல் விதிகளின்
படி வரலாற்றில் முதல் முறையாக முதல் இரண்டு வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அநுர குமாரவுக்கும் பிரதான எதிர்க் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் அநுர குமார 1.2 மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் சஜித்தைத் தோற்கடித்து வெற்றிபெற்றிருக்கிறார்.
சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு அதன் இணையத் தளத்தில் வெளியிட்ட முடிவு விவரங்களின் படி, அநுர குமார திஸநாயக்கா 42.31% வாக்குகளை வென்று எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித்தை இரண்டாம் இடத்துக்கும் பதவியில் இருந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்காவை மூன்றாம் இடத்துக்கும் தள்ளி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்துள்ள ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்குத் தனது இறுதிப் பிரியாவிடைச் செய்தியை விடுத்திருக்கிறார்.
"சிறிலங்கா என்ற பெயர் கொண்ட - மிகுந்த அன்புக்குரிய - எனது குழந்தையை அநுர குமாரவின் பொறுப்பில் ஒப்படைத்துச் செல்கிறேன்.." - என்று அந்தச் செய்தியில் அவர் மிகவும் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.
நாடு மிகவும் வங்குரோத்தான நிதி நிலைமையைச் சந்தித்து நாடெங்கும் பெரும் சிவில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு - ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்தவர் ரணில் விக்கிரமசிங்க.
நாட்டில் சீர்குலைந்துபோயிருந்த அத்தியாவசிய சேவைகள் உட்பட மக்களது நாளாந்த வாழ்வை ஓரளவு வழமைக்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அவரது தலைமைத்துவம் அப்போது உதவியிருந்தது .
⚫முன்னர் வந்த செய்தி :https://www.thasnews.com/post/எவர-க-க-ம-50-வ-த-வ-க-க-இல-ல-ம-தல-ம-ற-ய-க-மற-ச-ற-ற-வ-க-க-எண-ண-ம-பண
தாஸ்நியூஸ் - பாரிஸ்
22-09-2024
Comments