top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

சில்வர் குதிரையில் இளம் பெண்ணின் செய்ன் நதிச் சவாரி!

"நீர் ஊற்றின் பெண் தெய்வம்.."

"ஒற்றுமை, நட்புக்கான பயணம்.."

🟢🟡🔴🔵🟢🟡🔴🔵🟢🟡🔴🔵🟢


பாரிஸ், ஜூலை 27


நேற்றைய ஒலிம்பிக் தொடக்க விழாவில் மாஜாஜாலம் போலத் தோன்றி ரசிகர்களின் மனதைத் தொட்ட காட்சிகளில் சில்வர் குதிரையின் செய்ன் நதிச் சவாரியும் ஒன்று.


தொடக்க விழா நிகழ்ச்சி நிரலில் "ஒற்றுமை" (Solidarité) என்ற தலைப்பின் கீழான நிகழ்வுகளில் ஒன்றாக இந்தக் குதிரைச் சவாரி நடந்தது.


செய்ன் நதியில் ஒஸ்ரலிஸ் பாலத்தடியில் ஆரம்பித்து ஈபிள் கோபுரத்தின் அடிவாரம் வரை- சுமார் ஆறு கிலோமீற்றர்கள் தூரத்துக்குப் - பத்து நிமிட நேரம் நீடித்த குதிரைச் சவாரியை லட்சக்கணக்கான ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.


ஒலிம்பிக் கொடியைப் போர்த்தபடி வெள்ளி ஆடை அணிந்த இளம் பெண் ஒருவர் ஜொலிக்கும் வெள்ளி நிறக் குதிரையைச் செலுத்திச் செல்லும் அற்புதக் காட்சியாக அதன் முழு அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி சொல்லும் தகவல் என்ன..?


ஒலிம்பிக் போட்டிகளின் ஆன்மீகமாகிய நட்பையும் ஒற்றுமையையும் உலகெங்கும் பரப்புவதே குதிரைச் சவாரியின் நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

குதிரை செய்ன் நதியின் மேம்பாலங்களைக் கடந்து சென்ற போது பாலங்களில் புறாவின் இறக்கைகள் விரிவது போன்ற ஒளி அலங்காரங்கள் தோன்றின.


பாரிஸ் ஒலிம்பிக் விழாவின் கலைத்துவ இயக்குநர் தோமா ஜொலியின் (Thomas Jolly) கூற்றுப்படி, இளம்பெண்ணின் குதிரைப் பயணம் புராணக் கதைகளில் வருகின்ற செக்குவானா (Sequana) என்ற பெண் தெய்வத்தின் அவதாரமாகக் குறிப்பிடப்படுகிறது."நதியின் தெய்வம்", "எதிர்ப்பின் அடையாளம்" போன்ற அர்த்தங்களிலும் இதனைப் பார்க்கலாம் என்று அவர் கூறுகிறார்.

நதிகள் தொடர்பான புராணக் கதைகளில் அதன் ஊற்றிடங்களில் காணப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இளம் பெண் தெய்வமே "செக்குவான" எனப்படுகிறது. தண்ணீர் ஊற்றின் மனித வடிவமாகக் குறிப்பிடப்படுகின்ற

இந்தப் பெண்ணே செய்ன் நதியில் குதிரை மேலே தோன்றினார்.


சவாரி முடிவடைந்ததும் குதிரையில் வந்த பெண்ணே ஒலிம்பிக் கொடியை

அதனை ஏற்றிய இடத்துக்கு எடுத்தச் செல்வது போன்று அதன் தொடரான காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.


ரோபோ தொழில் நுட்பத்தின் அடிப்படையில் குதிரையின் அசல் ஓட்டத்தின் அசைவுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் விதமாக சுமார் ஓராண்டுகால முயற்சியில் இந்த உலோகக் குதிரை உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் நொந்த்(Nantes) நகரில் அமைந்துள்ள Blam workshop என்ற தொழில்நுட்பப் பட்டறையிலேயே அது வடிவமைக்கப்பட்டது என்ற கூடுதல் தகவல்களும் வெளியாகியுள்ளன.


🟢தொடக்க விழாவின் சில காட்சிகள் அடிக்குறிப்புகளுடன்..

நதி நீரின் மீது வீரர்களின் படகுப் பயணம்..


விளையாட்டு வீரர்களின் படகு அணிவகுப்பு ஆரம்பமாவதற்குமுன்பாக ஒஸ்ரலிஸ் பாலம் மீது பிரான்ஸின் மூவர்ண நீர் அலங்காரம்...

ரசிகர்களின் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் விழாவைத் தொடக்கி வைத்தார் பிரபல பாடகி லேடி ஹாஹா

பிரபல முலான் றூஷ் காபரே நடனக் அழகிகள் எண்பது பேர் வர்ண ஆடையில் நதிக்கரையோரம் கூடி 1820 ஆம் ஆண்டுக்கு முந்திய பிரான்ஸின் பாரம்பரிய கான்-கன் (can-can) நடனமாடினர்.


28 வயதான இளம் பாடகி அக்சல் செய்ன் - சிரல் (Axelle Saint-Cirel) பாரிஸின் பெரும் கண்காட்சி மண்டபமாகிய Grand Palais உச்சியில் நின்றவாறு நாட்டின் தேசிய கீதத்தைப் பாடிய காட்சி உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது.


பிரெஞ்சு - மாலி பின்னணி கொண்ட சுப்பஸ்ரார் பாடகி அயா நகமுரா (Aya Nakamura) நடனக் குழுவுடன் பாட வந்த காட்சி. பிரான்ஸின் தீவிர வலதுசாரிகளது கடும் எதிர்ப்பையும் மீறி அவரது வருகை ஒலிம்பிக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது.

பிரபல கனடா நாட்டுப் பாடகி செலின் டியோன்(Céline Dion) ஆரம்ப விழாவின் நிறைவில் ஈபிள் கோகோபுரத்தின் முதலாவது தளத்தில் நின்றிருந்தவாறு பாடி உலகெங்கும் உள்ள ரசிகர்களை அசத்தினார். நோய் காரணமாகக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அவர் பாடுவதைத் தவிர்த்து வந்தார். நேற்று அவர் பாடலின் முடிவில் உலக அமைதிக்கும் சமாதானத்துக்குமான

அழைப்பை விடுத்தார்.

ஒலிம்பிக் தீப்பந்தம் பிரான்ஸின் ஒலிம்பிக் சம்பியன்களால் லூவர் அருங்காட்சியகம் உட்பட நகரின் முக்கிய இடங்கள் ஊடகச் சுமந்து வரப்பட்டது. பின்னர் விளையாட்டு நட்சத்திரங்களான Marie-José Pérec மற்றும் Teddy Riner ஆகிய இருவரும் ஒலிம்பிக் தீச் சட்டியை ஏற்றிவைத்து காட்சி மிக உச்சமாக அமைந்தது.

பிரமாண்டமான வாயு பலூன் ஒலிம்பிக் தீச் சட்டியைச் சுமந்தவாறு வானில் மேலெழுந்த காட்சி...


லேசர் கதிர்களால் ஒளிர்ந்தது ஈபிள் கோபுரம்..

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

27-07-2024







0 comments

Comments


You can support my work

bottom of page