இரு மாதங்கள் முன்பே
தன்னுடன் பேசினாராம்
பாரிஸ், ஜூலை 3
இரண்டாவது சுற்று வாக்களிப்புக்கு இன்னமும் மூன்று தினங்கள் மாத்திரம் இருக்கின்ற நிலையில் அரசுத் தலைவர் மக்ரோனின் தந்தையார் தனது மகனைப் பற்றியும் அவரது அரசியல் வாழ்வு குறித்தும் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியிருக்கிறார்.
மக்ரோன் நாடாளுமன்றத்தைக் கலைக்கின்ற திடீர் முடிவை எல்லோரும் நினைப்பது போன்று ஜூன் 9 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் முடிவு வந்த பிறகு தான் எடுத்தார் என்பதை அவரது தந்தையார் நம்பவில்லை.
நாடாளுமன்றத்தைக் கலைத்தது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பே அது பற்றி என்னோடு பேசியிருக்கிறார். நாடாளுமன்றத்தின் மூலம் ஆட்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் அச்சமயம் என்னிடம் கவலை வெளியிட்டார். - இவ்வாறு மக்ரோனின் தந்தையார் ஜோன் மிஷெல் மக்ரோன் (Jean-Michel Macron) கூறியிருக்கிறார்.
ஆர்என்(Rassemblement national) கட்சி நாட்டின் அதிகாரத்துக்கு வந்துவிடும்
என்று நான் அஞ்சுகிறேன். ஆயினும்
இப்போது பிரெஞ்சு மக்கள் விரும்பினால் அவர்களது ஆட்சியை அனுபவித்துப் பார்க்கட்டும். அதன் பெறுபேற்றை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அதற்கு ஐந்து ஆண்டுகள் தேவையில்லை. இரண்டு ஆண்டுகளே போதும். ஆட்சியைத் திறம்பட முற்றுமுழுதாக நடத்தத் தகுதியற்றவர்கள் என்பதை இரண்டு ஆண்டுகளில் அவர்கள் வெளிப்படுத்துவார்களேயானால் அதன் பிறகு அவர்கள்கள் தொடர்ந்து பயணிக்கப் போவதில்லை என்பதை நாங்கள் நம்பலாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னோடு பேசுகையில் இவ்வாறு அவர் (அதிபர் மக்ரோன்) தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார் என்று ஜோன் மிஷெல் மக்ரோன் மேலும் கூறியிருக்கிறார்.
முன்னாள் நரம்பியல் நிபுணராகிய மிஷெல் மக்ரோன் இவ்வாறு அரசியல் விடயங்களைப் பேசுவது மிக மிக அரிதாகும். அவர் நாட்டின் கிழக்குப் பிராந்தியப் பத்திரிகைக் குழுமத்துக்கு வழங்கிய கருத்துக்கள் இன்று புதன்கிழமை செய்தி ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.
கடந்த ஜூன் 9 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் பெறுபேறுகள் வெளியாகிய கையோடு - அன்றிரவு - அவருக்கு நெருக்கமான அரசியல் கூட்டாளிகள் உட்பட - எவருமே எதிர்பாராத விதமாக திடீரென நாடாளுமன்றத்தைக் கலைக்கின்ற முடிவை மக்ரோன் அறிவித்திருந்தார். ஐரோப்பா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்திய அந்த அறிவிப்பு பிரான்ஸின் அரசியல் அடிக்கட்டமைப்புகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸின் தீவிர வலதுசாரிக் கட்சி நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகின்ற வாசலுக்கு வருவதற்கு வழிவகுத்திருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலின் முதற்சுற்றில் 33%வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வந்துள்ள தேசியவாத தீவிர வலதுசாரிக் கட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றில் தனக்கு ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை ஆதரவை வழங்குமாறு வாக்காளர்களிடம் கேட்டிருக்கிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
3-07-2024
Comments