top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

சர்ச்சைக்குரிய விமானம் மீண்டும் புறப்பட அனுமதி!

பயணிகளுடன் அது

மும்பைக்கே திரும்பும்?


பிரான்ஸின் வாட்ரி(Vatry) விமான நிலையத்தில் 303 இந்தியப் பயணிகளுடன் கடந்த வியாழக்கிழமை முதல் தடுத்துவைக்கப்பட்டிருந்த எயார் பஸ் விமானம் அங்கிருந்து மீண்டும்

பயணத்தைத் தொடர நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அது பெரும்பாலும் நத்தார் தினமாகிய இன்று திங்கட்கிழமை பகல் கிளம்பும் என்று விசாரணையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


நிக்கரகுவா சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தில் தமிழ், இந்தி மொழி பேசுகின்ற இந்தியப் பிரஜைகள் 303 பேர் பயணம்செய்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் தடுத்துவைத்துப் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு நிறுத்தப்பட்டனர்.

அதன் பிறகே விமானமும் பயணிகளும் திரும்பிச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று விமான நிலையம் அமைந்துள்ள மார்ன் மாவட்ட பொலீஸ் தலைமையகம் விடுத்த ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


ஆயினும் விமானம் இங்கிருந்து மீண்டும் எங்கே திரும்பிச் செல்லவுள்ளது என்ற தகவல் அந்த அறிக்கையில் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

அது பெரும்பாலும் இந்தியாவின் மும்பை நகருக்கே செல்லவுள்ளதாக உள்ளூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் கூறியிருக்கிறார்.

விமானத்துக்குச் சொந்தமான லெஜென்ட் எயார்லைன்ஸ் (Legend Airlines) நிறுவனத்தின் சட்டவாளர் ஒருவரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.


பொலீஸ் விசாரணையின் கீழ் உள்ளவர்கள் மற்றும் புகலிடம் கோரியவர்கள் தவிர சுமார் 250 பயணிகள் பயணத்தைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.


டுபாயில் இருந்து நிக்கரகுவா செல்லும் வழியில் பாரிஸ் வாட்ரி விமான நிலையத்தில் தொழில்நுட்பத் தேவையின் பொருட்டுத் தரையிறங்கிய அந்த விமானத்தில் பயணிகள் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்படுகின்றனர் எனக் கிடைத்த அநாமதேய தகவலை அடுத்தே பிரெஞ்சு எல்லைக் காவல் படையினர் அதனைச் சோதனையிட்டிருந்தனர். அதன் பிறகு பாரிஸ் அரச சட்ட அலுவலகம் விடுத்த உத்தரவின் கீழ் விமானம் தடுத்துவைக்கப்படிருந்தது.

அதில் பயணம் செய்த சிறுவர்கள் உட்பட 303 இந்தியப் பயணிகளும் விமான நிலையத்தில் கடந்த சில இரவுகளாகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்காக விமான நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கிறது.



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

25-12-2023

0 comments

Comentarios


You can support my work

bottom of page