top of page
Post: Blog2_Post

சர்வதேச நிலைவரம் பற்றிய மக்ரோனின் தொலைக்காட்சி நேரலை செவ்வி

நோர்மன்டி தரையிறக்கம்

நினைவு நாள் ஏற்பாடுகள்

தொடர்பாக விளக்கமளிப்பு


பாரிஸ், ஜூன் 3


அதிபர் மக்ரோன் பங்குபற்றுகின்ற தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி எதிர்வருகின்ற வியாழக்கிழமை

இரவு எட்டு மணிக்கு TF1 மற்றும் France 2 சேவைகளில் ஒளிபரப்பாகவுள்ளது.


உக்ரைன், காஸா போர் நிலைவரம் உட்பட சர்வதேச அரசியல் நிலைமை, நோர்மன்டித் தரையிறக்கத்தின் எண்பதாவது ஆண்டு நினைவுக் கொண்டாட்டங்கள் தொடர்பாகச் செய்தியாளர்களது கேள்விகளுக்கு அவர் நாட்டின் வடக்கே நோர்மன்டிப் பிராந்தியத்தில்(région Normandie) உள்ள Caen நகரில் இருந்தவாறு நேரலையில் கலந்துகொண்டு பதிலளிக்கவுள்ளார்.


மக்ரோனின் தரப்பினருக்குப் பெரும் அரசியல் சவாலாக மாறியுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் வாக்களிப்பு அடுத்துவரும் நாட்களில் (ஜுன் 9) நடைபெறவிருக்கின்ற நிலையில் அந்தத் தேர்தல் தொடர்பாகவும் தொலைக்காட்சி நேர்காணலில் அவரது கருத்துக்கள் வெளியாகவுள்ளன.


இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரக் காரணமாக அமைந்த "டி டே லான்டிங்ஸ்" (D-Day landings) எனப்படும் நோர்மன்டித் தரையிறக்கங்களின் (débarquement en Normandie) எண்பதாவது ஆண்டு நிறைவு நாள் இந்த வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதனை ஒட்டிய பல்வேறு நிகழ்ச்சிகள் நோர்மன்டிக் கடற்கரையோரம் நடைபெறவுள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது துணைவியார் ஜில் பைடன் மற்றும் உக்ரைன் நாட்டு அதிபர் ஷெலென்ஸ்கி உட்பட உலகத் தலைவர்கள் பலர் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைத் தரையிறக்கத்தின் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.

ரஷ்யா அதிபர் புடின் இந்தத் தடவை இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அழைக்கப்படவில்லை.


இந்த உலகப் போர் நினைவுநாள் ஏற்பாடுகள் தொடர்பாகவும் மக்ரோன் தனது நேரலை உரையில் விளக்கமளிக்கவுள்ளார். அதேசமயம்

மக்ரோன் தனது தொலைக்காட்சி நேர்காணலை ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் வாக்களிப்புக்கு முந்திய இறுதிப் பரப்புரைக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தப்போகிறார் என்று எதிர்க்கட்சிகள் மத்தியிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

03-06-2024




0 comments

Comments


You can support my work

bottom of page