சட்டவிரோத குடியேறிகளை
தடுக்க ஆறு மாதம் நடக்கும்
—தாஸ்நியூஸ் செய்திச் சேவை
பாரிஸ், செப்ரெம்பர் 15
ஜேர்மனி அயல் நாடுகளுடனான அதன் எல்லைகளில் பரிசோதனைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாகத் தற்காலிக அடிப்படையில் பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், லக்சம்பேர்க், பெல்ஜியம்
ஆகிய நாடுகளது எல்லைகளில் எல்லைப் பரிசோதனை நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன. அடுத்த ஆறு மாதங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும்.
நெதர்லாந்து, ஒஸ்ரியா, செக் குடியரசு , சுவிற்சர்லாந்து, லக்சம்பேர்க், போலந்து டென்மார்க், பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய ஒன்பது நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது ஜேர்மனி.
இவற்றில் செக் குடியரசு, போலந்து, சுவிற்சர்லாந்து மற்றும் ஒஸ்ரியா நாடுகளின் எல்லைகளில் கடந்த ஆண்டு இவ்வாறு எல்லைச் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன் மூலம் சுமார் முப்பதாயிரம் சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க முடிந்தது என்று ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
ஷெங்கன் வலய (Schengen Area) நாடுகளிடையே எல்லைக் கட்டுப்பாடற்ற சுதந்திரப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனினும்
பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத குடியேறிகள் தொடர்பான நெருக்கடிகளின் போது ஷெங்கன் உடன்படிக்கையை மீறிச் சோதனைகளை நடத்துகின்ற உரிமை
உறுப்பு நாடுகளுக்கு உள்ளது. பெரும் குடியேறிகள் படையெடுப்பையும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்களையும் எதிர்கொண்டு வருகின்ற ஜேர்மனி, எல்லைகளில் கண்காணிப்புக்களைத் தீவிரப்படுத்தி வருகின்றது.
ஜேர்மனியில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதல் சம்பவங்கள் நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளையும் வெளிநாட்டவர் மீதான வெறுப்புணர்வையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல்களில் குடிவரவை எதிர்க்கின்ற தீவிர வலதுசாரிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. இவ்வாறான நிலைமையிலேயே எல்லைகளை இறுக்கி மூடிப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
நாளை நடைமுறைக்கு வருகின்ற சோதனை காரணமாக நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் வழிகளில் பெரும் வாகன நெரிசல்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன்
ரயில்ப் பயண சேவைகளில் தாமதங்கள், தடைகள் ஏற்படலாம். வாகனங்களில் அடிக்கடி எல்லைதாண்டிப் பயணிப்பவர்களும் சிரமங்களுக்கு முகம்கொடுக்கநேரிடலாம்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
15-09-2024
Comments