top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஜேர்மனி மியூனிச் இஸ்ரேல் தூதரகம் அருகே ஆயுததாரி சுட்டுக் கொலை!

யூத ஆவண நிலையம்

நோக்கி துவக்குச் சூடு

1972 ஒலிம்பிக் தாக்குதல்

நினைவுநாளில் சம்பவம்


பாரிஸ், செப்ரெம்பர் 5


ஜேர்மனியின் மியூனிச் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலியத் தூதரகம் அருகே வைத்து துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலீஸார் சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.


இன்று வியாழக்கிழமை காலை தூதரகம் அருகே அமைந்துள்ள யூத ஆவண நிலையத்தின் மீது அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். வேட்டொலிகளை அடுத்து அங்கு விரைந்து வந்த பொலீஸார் அந்த நபருடன் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது. அதன்போது அந்த நபர் சூட்டுக்கிலக்காகி உயிரிழந்தார்.


பெரிய துப்பாக்கி ஒன்றுடன் தோன்றிய தாக்குதலாளி 18 வயதுடைய எம்ரா (Emrah) என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர் தனித்தே இயங்கியுள்ளார் என்றும் இஸ்ரேலியத் தூதரகமும் யூத ஆவணக் காப்பகமுமே அவரது இலக்குகள் என்பது தெளிவாகத் தெரிவதாகவும் ஜேர்மனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த வேளை இஸ்ரேலியத் தூதரகம் மூடப்பட்டிருந்தது. 1972 இல் மியூனிச் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாலஸ்தீன ஆயுத தாரிகளால் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 52 ஆவது ஆண்டு நினைவு நாளாகிய இன்று அது தொடர்பான நிகழ்வை முன்னிட்டே தூதரகம் மூடப்பட்டிருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.


"கறுப்பு செப்ரெம்பர்" எனக் குறிப்பிடப்படும் அந்தத் தாக்குதலில் தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த பதினொரு விளையாட்டு வீரர்களும் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


🔴ஒஸ்ரியாவில் தேடுதல்


இன்றைய தாக்குதலை நடத்திய இளைஞர் அண்டைநாடான ஒஸ்ரியாவில் வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளது. ஒஸ்ரியா பொலீஸ் கொமாண்டோக்கள் பொஸ்னியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த இளைஞனின் பெற்றோரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அயலவர்களை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டுப் பரிசோதனையும் அங்கு நடத்தப்பட்டிருக்கிறது.


குறிப்பிட்ட இளைஞர் ஐ. எஸ் தீவிரவாதிகளது இணைய வழித் தூண்டுதலால் இந்தப் பயங்கரவாதச் செயலைப் புரிந்துள்ளார் என்று விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.


மற்றொரு செய்தி

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

05-09-2024




0 comments

Comentarios


You can support my work

bottom of page