அரங்கக் கலைஞர்
தோமா ஜொலியின்
அடுத்த கைவரிசை
அமெரிக்க நடிகர்
ரொம் குரூஸ் சாகசம்
இன்னும் பல....
விவரங்கள் :தாஸ்நியூஸ்
பாரிஸ், ஓகஸ்ட் 9
பாரிஸில் இரண்டு வாரங்கள் நீடித்த உலகப் பெருவிழா முடிவுக்கு வருகிறது. கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா (cérémonie de clôture des JO 2024) 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஜூலை 26 இல் நடந்த தொடக்க விழா போன்று அது மிகப் பிரமாண்டமான நிகழ்வாக இருக்காது என்றாலும் பார்வையாளர்களுக்கு ஆச்சரியங்கள் பல காத்திருக்கின்றன.
செய்ன் நதி நீரின் மேலே தொடக்க விழாவை வடிவமைத்து உலகின் கவனத்தைக் கட்டிப் போட்ட பிரான்ஸின் பிரபல நாடக அரங்கவியல் கலைஞர் தோமா ஜொலியும்(Thomas Jolly) அவரது குழுவினருமே நிறைவு விழாவையும் காட்சிப்படுத்துகின்றனர். நிறைவு விழா திறந்த வெளியில் நடக்காது. அது பாரிஸின் புறநகரில் அமைந்துள்ள நாட்டின் பெரிய உதைபந்தாட்ட அரங்கமாகிய
Stade de France இல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஞாயிறு இரவு ஒன்பது மணி முதல் பதினொரு மணி வரை - இரண்டு மணி நேரங்களுக்கு
நீடிக்கும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகப் பலமாக இருக்கும். எனினும் திறந்த வெளியில் நடந்த தொடக்க விழாவுடன் ஒப்பிட்டால் பாதுகாப்புத் தரப்பினர் சற்று நிம்மதிப் பெரு மூச்சு விடக்கூடிய விதமாக விழா
மூடிய உள்ளரங்கில் நடக்கிறது.
🟢அரங்க நிகழ்வு
« Records » என்ற தலைப்பில் 40 நிமிடங்களுக்கு அரங்கக் கலை நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.எதிர்கால உலகில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள் மறைந்து போகின்றன. அதன் பிறகு என்ன நடக்கிறது? இன்னிசை நடன நாடக நிகழ்வில் அதற்கு பதில் கிடைக்கிறது. மற்றொரு புதிய Pierre de Coubertin மீண்டும் ஒலிம்பிக்கைக்
கண்டுபிடிக்கிறார். இதனைக் கற்பனைக் கருப் பொருளாகக் கொண்ட ஆற்றுகை நிகழ்வு பிரதான இடம்பிடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மிகப் பிரபலமான பிரான்ஸின் Phoenix மற்றும் Air இசைக்குழுக்களைச் சேர்ந்த கலைஞர்கள் நிறைவு விழாவில் கலந்துகொண்டு இன்னிசை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளனர்.
நிறைவு விழா மேடையில் பார்வையாளர்களுக்கு ஆச்சரியமளிக்கவுள்ள மற்றொரு வரவாகப் பிரபல அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமாகிய ரொம் குரூஸ்
(Tom Cruise) தோன்றவுள்ளார். 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிடம் ஒலிம்பிக் கொடியைக் கையளிக்கின்ற வைபவத்தில் அவர் இணைந்து கொள்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. நிறைவு விழா நடைபெறுகின்ற Stade de France அரங்கின் கூரையில் இருந்து ஒலிம்பிக் கொடியை எடுத்துக் கொண்டு லொஸ் ஏஞ்சல்ஸுக்குப் பறக்கின்ற விதமாக அவரது சொந்த சாகச நிகழ்வு ஒன்றும் இடம்பெறும் எனத் தெரிய வருகிறது.
நிறைவு விழாவைப் பார்வையிடுவதற்கான ரிக்கெற் கட்டணம் 250 முதல் ஆயிரத்து 600 ஈரோக்கள் வரை உயர்ந்துள்ளது. நாடெங்கும் 22 மில்லியன் பேர் பார்வையிட்ட தொடக்க விழாவைப் போன்றே நிறைவு விழாவும் இருக்கும். பிரான்ஸ் தொலைக்காட்சி France Télévisions (France 2) நிறைவு விழாவை
நேரலை செய்யும்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
09-08-2024
Comments