தலைக்கு வைத்த வேட்டு
காதை உரசிச் சென்றதில்
மயிரிழையில் தப்பினார்...!!!
கூரையில் மறைந்திருந்த
தாக்குதலாளி சுடப்பட்டார்
முழு விவரம் ThasNews.Com
பாரிஸ், ஜூலை 14
அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் குடியரசுக் க் கட்சியின் அதிபர் வேட்பாளருமாகிய டொனாலட் ட்ரம்ப்
மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டி ருக்கிறது. பென்சில்வேனியா மாநிலத்தில் அவர் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தலையை இலக்கு வைத்துச் சுடப்பட்டிருக்கிறது. எனினும் துப்பாக்கி வேட்டு அவரது வலது காதோடு உரசிச் சென்றதில் அவர் மயிரிழையில் உயிர்தப்பியிருக்கிறார். தாக்குதல் நடத்திய நபரை உளவு சேவையினர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். அவர் யார் என்ற விவரம் இன்னமும் வெளியாகவில்லை.
வாக்களிப்புக்கு இன்னமும் குறுகிய காலமே உள்ள நிலையில் இந்தக் கொலை முயற்சி அமெரிக்காவின் அதிபர் தேர்தலைப் பெரும் பதற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
78 வயதான முன்னாள் அதிபர் சனிக்கிழமை பென்சில்வேனியா பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்தார். பெரும் சனக் கூட்டம் அங்கு திரண்டிருந்தது. அச்சமயத்திலேயே திடீரெனப்பெரும் வேட்டொலி கேட்டது. ட்ரம்ப் உட்பட மேடையில் நின்றிருந்தோர் உடனே பாதுகாப்புக்காகத் தரையில் வீழ்ந்து படுத்துக்கொள்ள முயன்றனர். சிறிது நேரத்தில் காதோரமும் கன்னத்திலும் இரத்தம் சிந்தப்பட்ட நிலையில் ட்ரம்ப்
மேடையில் இருந்து அரச ரகசிய சேவையினரால் அழைத்துச் செல்லப்படுகின்ற காட்சிகள் வெளியாகின. அவரைக் காவலர்கள் அருகே நின்ற வாகனம் ஒன்றுக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறினார்.
வேட்பாளர் ட்ரம்ப் சுடப்பட்ட பின்னர் வெளியிட்ட பதிவு ஒன்றில் "ஒருபோதும் சரணடைய மாட்டேன்" - என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இன்னொரு பதிவில் -
"காதோரம் ஏதோ இரைந்து செல்வதை உணர்ந்தேன்.. என்னவோ ஆபத்து நடக்கிறது என்பதை உணர முடிந்தது. துப்பாக்கி வேட்டு என்பதும் புரிந்தது. காதோரம் இரத்தம் சிந்தியது..
இதுபோன்ற ஒரு செயல் நம் நாட்டில் நடப்பதை நம்ப முடியாதுள்ளது..." - எனக் குறிப்பிட்டுள்ளார்.
🔴தாக்குதலாளி யார்?
அமெரிக்காவின் சமஷ்டி உளவு சேவை
இதனை ஒர் அரசியல் கொலை முயற்சி என்று அறிவித்திருக்கிறது. தாக்குதலாளியின் விவரங்கள், நோக்கம் என்பன தொடர்பான விவரங்களை அதிகாரிகள் உடனே வெளியிடவில்லை. ஆனால் -
படம் :தாக்குதலாளியின் உடலுடன் அமெரிக்கக் கொமாண்டோ வீரர்கள்..
அமெரிக்க செய்தி ஊடகங்களது தகவல்களின்படி ட்ரம்ப் மீது சுட்டவர் தோமஸ் மத்தியூ குறூக்ஸ் (Thomas Matthew Crooks) என்ற இருபது வயதான இளைஞர் எனத் தெரிய வந்துள்ளது.
அவர் குறிபார்த்துச் சுடுகின்ற இயந்திரத் துப்பாக்கியுடன் கூட்ட மேடையில் இருந்து சுமார் 130 மீற்றர் தூரத்தில் உள்ள கட்டடம் ஒன்றின் கூரைப் பகுதிக்குள் மறைந்து இருந்தமையும் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக மோசமான அரசியல் படுகொலை முயற்சி என்று குறிப்பிடப்படுகின்ற இந்தச் சம்பவத்துக்கு சர்வதேசம் எங்கும் இருந்து தலைவர்களின் கண்டனங்கள் அலையாக வெளியாகி வருகின்றன.
மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
தாஸ்நியூஸ் - பாரிஸ்
14-07-2024
コメント