top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

டெனிஷ் தலைநகர மையத்தில் புராதன பங்குச்சந்தை தீயில் எரிந்து நாசம்!

400 வருடங்கள் முந்திய

பாரம்பரிய கட்டடம் அழிவு


பாரிஸ் நொத்த-டாம் போன்று

கூம்புக் கோபுரம் சாய்ந்தது

பாரிஸ், ஏப்ரல் 16


டென்மார்க் நாட்டின் தலைநகரமான

கோபனேஹனின் மையத்தில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பங்குச் சந்தை கட்டடம் (old stock exchange) தீயில் எரிந்து நாசமானது.

 

17 ஆம் நூற்றாண்டின் போர்சன் (Børsen) நகரத்தின் பழமையான கட்டடங்களில் ஒன்றான,பங்குச் சந்தையின் பிரதான அடையாளச் சின்னமான டிராகன் கூம்புக் கோபுரம் (dragon spire) தீயில் எரிந்தவாறு துண்டுகளாகத் தரையில் வீழ்ந்த காட்சிகள் பார்வையாளர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


கட்டடத்தின் கோபுரத்தைத் தீ சாய்த்த காட்சி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸ் நகரில் நொத்த-டாம் மாதா தேவாலயத்தின் கூரைக் கோபுரத்தைத் தீ விழுங்கிய காட்சியை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தது என்று நேரில் கண்ட பலரும் ஊடகங்களிடம்

கூறியிருக்கின்றனர்.


400 ஆண்டுகால டெனிஷ் கலாச்சார பாரம்பரியம் தீப்பிடித்து எரிந்துள்ளதாக கலாச்சார அமைச்சர் ஜாகோப் ஏங்கல்-ஷ்மிட் (Jakob Engel-Schmidt) தெரிவித்திருக்கிறார். "டெனிஷ் வரலாற்றின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருக்கிறது" என்று பிரதமர் மெற்ற ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) தனது சமூகவலைத் தளத்தில் எழுதியுள்ளார்.

 

கட்டடத்தில் தீப் பிடித்து விளாசி எரியத் தொடங்கியதும் அதன் உள்ளே தளங்களில் பேணப்பட்டு வந்த புராதன ஓவியங்களை மீட்பதற்காகப் பலரும் அங்கு விரைந்தனர். விலைமதிப்பற்ற ஓவியங்களை மீட்கும் முயற்சிக்கு உதவ இராணுவம் அழைக்கப்பட்டது. நகரின் பெரும் பகுதிகள் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டன.


1625 ஆம் ஆண்டுக்கு முந்தியது என்று குறிப்பிடப்படுகின்ற இந்தக் கட்டடம் டென்மார்க் நாடாளுமன்றத்துக்கு (Folketing) மிக நெருக்கமாக கிறிஸ்டியன்ஸ்போர்க் கோட்டையின் (Christiansborg castle) பழைய அரச அரண்மனையோடு அமைந்துள்ளது.

இந்தக் கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாக டென்மார்க் வர்த்தக சம்மேளனம் (Chamber of Commerce) இயங்கி வருகிறது.


காலையில் கட்டடத்தின் மேலாகப் புகைமண்டலம் எழுவதை நகர வாசிகள் அவதானித்தனர். சிறிது நேரத்துக்குள் தீ மிக வேகமாகக் கட்டடத்தின் ஏனைய தளங்களுக்குப் பரவியது. பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட

போதிலும் பங்குச் சந்தைக் கட்டடம் முற்றாக எரிந்து அழிந்துள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

16-04-2024




0 comments

Comments


You can support my work

bottom of page