top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

டியாகோ கார்ஸியா தீவில் தங்கியுள்ள 56 ஈழத் தமிழர்கள் தற்காலிகமாக ருமேனியாவுக்கு!

ஆறு மாதங்கள் தங்கவைத்து

பின்னர் நாடு கடத்தத் திட்டமா?


பாரிஸ், ஒக்ரோபர் 09


இந்து சமுத்திரத்தில் அமெரிக்க - பிரிட்டிஷ் படைத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில்(Diego Garcia) நீண்ட காலம் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டசின் கணக்கான இலங்கைத் தமிழர்கள் அங்கிருந்து தற்காலிகமாக ருமேனியா நாட்டுக்கு இடமாற்றம்செய்யப்படவுள்ளனர்.


ஆறு மாதங்களின் பின்னர் அவர்கள் இங்கிலாந்துக்கு திரும்ப முடியும். அதேசமயம் அவர்களில் பலருக்கு நிதி ஆதாரங்கள் வழங்கப்பட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்ல ஊக்குவிக்கப்படவுள்ளனர்.


பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை ஆதாரம் காட்டி பிபிசி செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.


தீவிலும் றுவாண்டா நாட்டிலுமாகத் தங்கியுள்ள இந்த 56 இலங்கைத் தமிழ் அகதிகளது எதிர்காலம் தொடர்பாக பிரிட்டிஷ் அரசு தீர்வு ஒன்றை எட்டும் வரை அவர்கள் ருமேனியாவில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சபையின்

அகதி முகாமில் தங்கவைக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.


கடந்த 2021 ஆம் ஆண்டு இந்து சமுத்திரப்பகுதியில் படகு ஒன்றில் பயணித்த டசின் கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகள் அவர்களது படகு பழுதடைந்ததை அடுத்து டியாகோ கார்சியா தீவில் கரையொதுங்கி அங்கே புகலிடம் கோரியிருந்தனர்.


இலங்கையில் தங்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது என்று கூறிய அவர்கள் அங்கிருந்து கனடா செல்லும் வழியிலேயே இடையில் கடலில் தத்தளிக்க நேர்ந்தது.


பிரிட்டிஷ் நாட்டுக்குச் சொந்தமான இந்து சமுத்திர நிர்வாகப் பகுதிகளில் (British Indian Ocean Territory - Biot) அடங்கும் தீவுகளில் ஒன்றே டியாகோ கார்சியா ஆகும். இரண்டு வல்லரசுகளின் படைகளது ரகசிய கூட்டுப் படைத் தளம் அமைந்துள்ள அந்தத் தீவில் தஞ்சம் கோரிய முதல் வெளிநாட்டவர்கள்

இந்த இலங்கைத் தமிழர்களே ஆவர்.


சுமார் 60 வரையான தமிழ் அகதிகள் அங்கு தனிமையான சூழ்நிலையில் தடுப்பு முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு வெளியுலகத் தொடர்புகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் றுவாண்டா நாட்டில் திறக்கப்பட்ட இடைத் தங்கல் தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருந்தனர். தனிமை, விரக்தி காரணமாக அகதிகளில் சிலர் உயிர்மாய்க்கவும் முயற்சித்துள்ளனர்.

படம் :டியாகோ கார்சியா தீவில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற முகாம் பகுதி.


மொறீசியஸ் தீவுக் கூட்டங்களில் அடங்குகின்ற டியாகோ கார்சியா தீவு நீண்ட காலமாக இங்கிலாந்தின் நிர்வாகப் பகுதியாக இருந்து வந்தது.

தற்போது அதன் இறைமையை மொறீசியஸ் நாட்டிடம் வழங்குகின்ற உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது.

எனினும் தீவைக் கையளித்த பிறகும் அங்கே உள்ள ரகசிய படைத் தளம் தொடர்ந்தும் செயற்படும் வகையிலேயே இந்த உடன்பாடு கைச்சாத்தாகியுள்ளது.


மொறீசியஸ் - இங்கிலாந்து இடையை

டியாகோ கார்சியா தொடர்பான உடன்பாடு எட்டப்பட்ட பிறகு அங்கு புகலிடம் கோரித் தங்கியுள்ள இலங்கை அகதிகளது எதிர்காலம் என்ன என்ற கேள்வியை மனிதாபிமான நிறுவனங்கள் எழுப்பியுள்ளன. இந்த நிலையிலேயே அவர்களை அங்கிருந்து தற்காலிகமாக ருமேனியா நாட்டுக்கு நகர்த்துவதற்குத் திட்டமிடப்படுதாகத் தெரியவருகிறது.

அதேசமயம் இவர்களில் சிலருக்கு இங்கிலாந்தில் தற்காலிக வதிவிட அனுமதி கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

09-10-2024


0 comments

Comments


You can support my work

bottom of page