12 பேருக்கு சிறு காயம்
பாரிஸ், மே 26
டோஹாவிலிருந்து டப்ளின் நோக்கி வந்த கட்டார் எயார் வேய்ஸ் விமானம் ஒன்று இன்று பிற்பகல் துருக்கிக்கு
மேலே குழப்பத்தில் சிக்கியதில் பயணிகள் அறுவரும் பணியாளர்கள் அறுவருமாகப் பன்னிருவர் சிறு காயங்களுக்கு இலக்காகினர்.
கட்டார் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமன போயிங் 787-9 ட்ரீம்லைனர் QR017விமானமே துருக்கி வான்பரப்புக்கு மேலே 35 ஆயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த சமயத்தில் குழப்பத்தில் (turbulence) சிக்கியது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அது காற்று இடைவெளிக்குள் சுமார் இருபது வினாடிகள் கீழே வீழ்ந்து குலுங்கியுள்ளது. அச்சமயம் விமானத்தின் உள்ளே பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் பரிமாறும் நேரமாக இருந்ததால் பலரும் ஆசனப் பட்டிகளை அணிந்திருக்கவில்லை. அதனால் உணவும் பானங்களும் அங்கும் இங்குமாகத் தூக்கி வீசப்பட்டன என்று சொல்லப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்த விமானம் டப்ளின் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமான நிலையப் பொலீஸார் மற்றும் அம்புலன்ஸ் சேவையினர் விமானத்தைச் சூழ்ந்து காணப்பட்டனர். இறங்கி வந்த பயணிகள் அனைவரது முகங்களும் அதிர்ச்சியில் உறைந்து காணப்பட்டன.
சிறு காயங்கள் மற்றும் உளப்பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள்
மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஒரு விமானம் இது போன்ற ஒரு பெரும் குழப்பத்தில் (severe turbulence)சிக்கி ஒருவர் உயிரிழந்து எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த
சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குள் இந்த இரண்டாவது சம்பவம் நடுவானில் நிகழ்ந்திருக்கிறது.
விமானங்கள் இது போன்ற தீவிர குழப்பங்களில் சிக்கிக்கொள்கின்ற சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்துவருகின்றது. பூமி வெப்பமடைவதற்கும் இந்த வான வளிக் குழப்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
Comments