top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

தாக்குதல் அச்சம்! ஈரான் வான்பரப்பை தவிர்த்துப் பறக்கும் சிவில் விமானங்கள்

மத்தியகிழக்கில் பதற்றம்


பாரிஸ், ஏப்ரல், 13


இஸ்ரேல் மீது ஈரானின் பதிலடித் தாக்குதல் எந்த நேரத்திலும் இடம்பெறலாம் என்ற பதற்றம் அதிகரித்துவருகின்ற நிலையில் -


எயார்பிரான்ஸ் நிறுவனம் அதன் விமானங்கள் ஈரானிய வான் பரப்பின் மேலே பறப்பதைத் தவிர்த்துள்ளது.

வியட்நாமின் ஹோ-ஷி-மிங்கில் (Ho Chi Minh) இருந்து பாரிஸ் புறப்பட்ட ஏஎப் 253 பயணிகள் விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பாங்கொக்கிற்குத் திருப்பப்பட்டது. அதேசமயம் மற்றொரு விமானம் ஈரான் வான்பரப்பைத் தவிர்த்துவிட்டுத் துர்க்மெனிஸ்தான் (Turkmenistan) நாட்டுக்கு மேலாகப் பறந்து - சுமார் நான்கு மணிநேரம் தாமதமாகப்- பாரிஸ் வந்தடைந்தது.


புதுடில்லியில் இருந்து இந்திய நேரப்படி இன்று காலை 04.30 மணிக்குப் புறப்பட்ட "எயார்இந்தியா -

161" விமானம் ஈரானிய வான்பரப்பைத்

தவிர்த்து வேறு மார்க்கத்தில் லண்டன்

சென்றடைந்தது என்று அறிவிக்கப்

பட்டுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலியாவின் குவன்ராஸ் (Qantas) விமானங்களும் ஈரான் வான்பரப்பைத் தவிர்த்துப் பறக்கத் தொடங்கியுள்ளன.


இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்கள் மத்திய கிழக்கில் பிராந்தியப் போராக மாற்றமடைவதற்கான சாத்தியங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.


சிரியா நாட்டில் ஈரானியத் தூதரகம் அமைந்திருந்த கட்டடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வான்வழித் மூலம் தாக்கித் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது.


இஸ்ரேல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகின்ற அந்தத் தாக்குதலில் தூதரகத்தில் தங்கியிருந்த ஈரானியப் புரட்சிக் காவல் படையின் (Islamic Revolutionary Guards) மூத்த தளபதிகள் உட்படச் சிலர் கொல்லப்பட்டனர். அதனால் ஈரான் கடும் சீற்றமடைந்துள்ளது.


வெளிநாடொன்றின் தூதரகத்தைத் தாக்குவது அந்த நாட்டின் எல்லைக்குள் நேரடியாகப் போர் தொடுப்பதற்குச் சமனாகும். இஸ்ரேலின் தாக்குதலுக்குத் தகுந்த தண்டனை நிச்சயம் வழங்கப்படும் என்று ஈரானிய அரச உயர்பீடம் உடனடியாகவே எச்சரித்திருந்தது. இதனால் மத்திய கிழக்கில் போர் மூளக்கூடிய ஆபத்தான நிலைவரம் தோன்றியுள்ளது.


அமெரிக்கா இஸ்ரேலைப் பாதுகாக்கும் விதமாகத் தனது போர்க்கப்பல்களை

நிலையெடுத்து நிறுத்தியுள்ளது.


இதுதொடர்பான மற்றொரு செய்திக்கு ThasNews.Com 


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

13-04-2024



0 comments

Comments


You can support my work

bottom of page